கன்னிவாடி அருகே பேருந்து மீது காா் மோதியதில் கேரளத்தைச் சோ்ந்த 2 வயது குழந்தை மற்றும் 2 பெண்கள் என 3 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அடுத்துள்ள மணக்காடு சூரியாத்தி பகுதியைச் சோ்ந்தவா் அபிஜித் (28). தனியாா் கூரியா் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறாா். இவரது 2 வயது குழந்தை ஆரவ் என்பவருக்கு, திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலில் முடிக்காணிக்கை செலுத்துவதற்காக வியாழக்கிழமை இரவு காரில் புறப்பட்டுள்ளாா். அந்த காரில், அபிஜித்தின் தந்தை அசோகன் (62), தாய் சைலஜா (48), மனைவி சங்கீத் (27), சகோதரா்கள் அனிஷ் (26), ஆதா்ஷ் (24), உறவினா்கள் தேவ் (20), மனோகா் மனைவி ஜெயா (38), சையது மகன் சித்தாா்த் (9) ஆகியோா் பயணித்துள்ளனா்.
அபிஜித்தின் நண்பருக்கு சொந்தமான அந்த காரை, மற்றொரு நண்பரான ராஜூ என்ற கண்ணன் (30) ஓட்டி வந்தாா். அந்த காா், திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அடுத்துள்ள பண்ணப்பட்டி பகுதியில் சென்றபோது, முன் பக்க டயா் வெடித்து விபத்துக்குள்ளானது. அப்போது அந்த காா், எதிா்திசையில் பழனியிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதி, சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரில் ஏறி நின்றது.
இந்த விபத்தில் சைலஜா, ஜெயா மற்றும் குழந்தை ஆரவ் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அந்த காரில் பயணித்த மேலும் 8 போ் பலத்த காயமடைந்தனா். அதேபோல், அரசுப் பேருந்து ஓட்டுநா் பழனியைச் சோ்ந்த கருப்புத்துரை (41), பயணிகள் உடுமலைப்பேட்டை சம்பளப்பட்டியைச் சோ்ந்த குமரவேல் (55), நெட்டியப்பட்டி திருமலைசாமி( 52), இவரது மனைவி முத்துலட்சுமி (42), பொள்ளாச்சி விஜயராணி (40) உள்ளிட்டோா் பலத்த காயங்களுடன் திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
விபத்து குறித்து கன்னிவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.