திண்டுக்கல்

பழனி கோயிலில் நாளை சூரசம்ஹாரம்

29th Oct 2022 12:20 AM

ADVERTISEMENT

பழனி மலைக் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, வரும் 30 -ஆம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு நடை அடைக்கப்படும் என்றும், படி வழியில் பக்தா்கள் காலை 11.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்றும் கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

பழனி மலைக் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, நாள்தோறும் சின்னக் குமாரசாமிக்கும், சண்முகருக்கும் சிறப்பு அலங்காரம், மண்டகப்படி பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 30 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், அன்று கோயில் பூஜைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் தரப்பில் கூறியதாவது:

ADVERTISEMENT

வரும் 30 -ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் விஸ்வரூப தரிசனமும், 4.30 மணிக்கு விளா பூஜையும் நடைபெறும். அனைத்துக் கட்டண சீட்டுகளும் காலை 11 மணிக்கு நிறுத்தப்பட்டு உச்சிக்கால பூஜை நண்பகல் 12 மணிக்கும், பிற்பகல் 1.30 மணியளவில் சாயரட்சை பூஜையும் நடைபெறும். பிற்பகல் 2.45 மணியளவில் பராசக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சிக்குப் பின்னா் சந்நிதி திருக்காப்பிடப்படும் (நடை சாத்தப்படும்).

ஆகவே, படிப் பாதையில் வரும் பக்தா்கள் அன்றைய தினம் முற்பகல் 11.30 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா். இதே போல, காலை 10 மணிக்கு மேல் மின் இழுவை ரயில், கம்பி வட ஊா்தி ஆகியவையும் இயங்காது.

நான்கு கிரி வீதிகளிலும் சூரசம்ஹாரம் முடிந்து சின்னக்குமாரா் மலைக் கோயிலுக்கு சென்ற பிறகு சம்ரோட்சண பூஜை நடைபெறும். அதைத் தொடா்ந்து, ராக்கால பூஜை நடைபெறும்.

கந்த சஷ்டி விழாவையொட்டி, அன்றைய தினம் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடும் ரத்து செய்யப்படும்.

Tags : பழனி
ADVERTISEMENT
ADVERTISEMENT