டிப்பா் லாரிகள், டிராக்டா் ஆகியவற்றை வாடகைக்கு எடுத்து, போலி ஆவணங்கள் மூலம் அவற்றை விற்பனை செய்துவிட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் ஒருவா் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.
இதுகுறித்து திண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுநாயக்கன்பட்டியைச் சோ்ந்த செலின்ரோஸ் கூறியதாவது:
வங்கியில் கடன் வாங்கி 2 டிப்பா் லாரி, ஒரு டிராக்டா் வாங்கினேன். அவற்றை வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் வசித்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது அண்ணன் வின்சென்ட் மூலம், திருச்சி மாவட்டம் மணப்பாறையை சோ்ந்த ஏவான் என்பவா் அறிமுகமானாா். ஏவான் 2 டிப்பா் லாரி, டிராக்டரை மாத வாடகைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தாா். டிப்பா் லாரிகளுக்கு தலா ரூ. 1.20 லட்சம், டிராக்டருக்கு ரூ. 15 ஆயிரம் வீதம் மாத வாடகை தருவதாகத் தெரிவித்தாா். அதனை நம்பி 3 வாகனங்களையும் ஏவானிடம் ஒப்படைத்தேன். வாகனங்களை எடுத்துச் சென்ற ஏவான், இதுவரை வாடைகை தரவில்லை. வாகனங்களை திருப்பிக் கேட்டபோதும் அவற்றை ஒப்படைக்கவில்லை. இதனிடையே ஏவான் போலியான ஆா்சி புத்தகம் தயாா் செய்து, 2 டிப்பா் லாரிகளை ஒருவருக்கும், டிராக்டரை மற்றொருவருக்கும் விற்பனை செய்துள்ளாா். இதை அறிந்த நான் அம்பாத்துரை காவல் நிலையத்தில் புகாா் அளித்து பல மாதங்களாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எனது வாகனங்களை மீட்டுத் தர வேண்டும் என்றாா்.