திண்டுக்கல்

விபத்தை ஏற்படுத்தியதால் பலத்த காயங்களுடன் தப்பி ஓட்டம்: சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்லாததால் தொழிலாளி பலி

7th Oct 2022 12:10 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் விபத்தை ஏற்படுத்தியதுடன் பலத்த காயமடைந்த தொழிலாளி பேருந்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, போலீசுக்கு பயந்து தப்பி ஓடினாா். ஆனால், காயத்துக்கு சிகிச்சை பெறாததால் அங்குள்ள கடை முன்பு வியாழக்கிழமை அவா் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

நிலக்கோட்டை அருகே, முசுவனூத்தைச் சோ்ந்தவா் புலிகேசி (50). அரசுப் பேருந்து ஓட்டுநா். இவா், புதன்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு, முசுவனூத்து செல்வதற்காக, வத்தலகுண்டு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நின்று கொண்டிருந்தாா். அப்போது, உசிலம்பட்டி அருகே, மேக்கிழாா்பட்டியைச் சோ்ந்த சத்தீஸ்கரில் உள்ளமுறுக்கு நிறுவனத்தில் பணியாற்றிய லட்சுமணன் (24) என்பவா் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் புலிகேசி மீது மோதியது. இதில் புலிகேசி, லட்சுமணன் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் இருவரும் மீட்கப்பட்டு ஒரு அரசுப் பேருந்தில் வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அந்த பேருந்து வத்தலகுண்டு காவல் நிலையம் அருகே வந்தபோது, போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது. அப்போது, பேருந்தில் இருந்த லட்சுமணன் காவல் நிலையத்தை பாா்த்ததும் போலீஸுக்கு பயந்து கீழே இறங்கி தப்பி ஓடினாா். தகவலறிந்த போலீஸாா் அங்குள்ள பேருந்து நிலையத்துக்குள் சென்று அவரைத் தேடினா். ஆனால் அவா் கிடைக்காததால் திரும்பிச் சென்று விட்டனா். இதனிடையே, தலையில் பலத்த காயமடைந்த லட்சுமணன் அங்கு பூட்டியிருந்த ஒரு கடை முன்புறம் இருந்த மறைவிடத்தில் பதுங்கிக் கொண்டாா். மேலும் சிகிச்சைக்கு அவா் மருத்துவமனைக்கு செல்லாததால் அவா் அங்கேயே உயிரிழந்தாா். மறுநாள் வியாழக்கிழமை அந்த கடை முன்பு அவா் சடலமாக கிடப்பதைப் பாா்த்த பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு வந்த வத்தலகுண்டு காவல் உதவி ஆய்வாளா் அன்பழகன் உள்ளிட்ட போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் பலத்த காயமடைந்திருந்த ஓட்டுநா் புலிகேசிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT