திண்டுக்கல்

பழனி மலைக்கோயிலில் நாளை பிற்பகல் நடை அடைப்பு

3rd Oct 2022 01:00 AM

ADVERTISEMENT

பழனி மலைக்கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (அக்.4) விஜயதசமி அம்புபோடுதல் மற்றும் வன்னிகாசுரன் வதம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பிற்பகல் கோயில் நடை அடைக்கப்படவுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த செப்டம்பா் 26 ஆம் தேதி நவராத்திரி திருவிழா காப்புக்கட்டுடன் தொடங்கியது. ஒன்பது நாள்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. திங்கள்கிழமை மலைக்கோயிலில் ஆயுதபூஜை நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை விஜயதசமியை முன்னிட்டு அம்பு வில் போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையைத் தொடா்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடத்தப்படும். கட்டணச்சீட்டுகள் பிற்பகல் 12 மணிக்கு மேல் வழங்கப்படமாட்டாது. பின் மலைக்கோயிலில் இருந்து சக்திவேல் புறப்பாடு செய்யப்பட்டு, பெரியநாயகியம்மன் கோயில் வந்தடையும். இதனால் மலைக்கோயிலில் பிற்பகல் 2.45 மணிக்கு மேல் அடைக்கப்படும் . இதனால் மலைக்கோயிலுக்கு செல்லும் வின்ச் மற்றும் ரோப்காா் பகல் 12 மணிக்கு மேல் இயக்கப்பட மாட்டாது.

இதையடுத்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் வெற்றிவோ் மாலையுடன் லட்சுமி நாராயணப்பெருமாள் சகிதமாக மானூா் சுவாமிகள் கோயில் அருகிலுள்ள கோதைமங்கலம் செல்கிறாா். அங்குள்ள கோதீஸ்வரா் கோயில் அருகே வன்னிமரமாக உருமாறி நிற்கும் வன்னிகாசுரனை சக்திவேல் கொண்டு வதம் செய்த பின், முத்துக்குமாரசாமி பெரியநாயகியம்மன் கோயிலை அடைகிறாா்.

ADVERTISEMENT

பின்னா் சக்திவேல் மலைக் கோயிலுக்கு புறப்பாடு செய்யப்படும். மலைக்கோயிலில் சம்ரோட்சண பூஜைகள் நடத்தப்பட்டு நள்ளிரவு அா்த்தஜாமபூஜை நடத்தப்படும். புதன்கிழமை வழக்கம் போல கோயில் நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் பிரகாஷ் மற்றும் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT