திண்டுக்கல்

தீபாவளிப் பண்டிகைக்கு கதா் ரகங்கள் விற்பனை இலக்கு ரூ.1.35 கோடி: ஆட்சியா்

2nd Oct 2022 10:50 PM

ADVERTISEMENT

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நடப்பாண்டில் ரூ.1.35 கோடிக்கு கதா் ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்தாா்.

காந்தியடிகளின் 154 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் மேயா் இளமதி, மாநகராட்சிப் பொறியாளா் நாராயணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

அதனைத் தொடா்ந்து, அண்ணா வணிக வளாகத்தில் அமைந்துள்ள கதா் அங்காடியில், கதா் கிராமத் தொழில்கள் மற்றும் செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் காந்தியடிகள் பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி கதா் சிறப்பு விற்பனை தொடக்க விழாவில் ஆட்சியா் ச.விசாகன் கலந்து கொண்டாா். கதா் முதல் விற்பனையை தொடங்கி வைத்து ஆட்சியா் விசாகன் தெரிவித்ததாவது:

கடந்த 2021-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனையாக ரூ.42.42 லட்சம் மதிப்பில் கதா் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

நடப்பு ஆண்டில் (2022) தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நமது மாவட்டத்திற்கு விற்பனை இலக்காக ரூ.1.35 கோடி மதிப்புள்ள கதா் ரகங்களை விற்பனை செய்திட தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியத்தால் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கதா் கிராமத்தொழில் வாரியத்தின் கீழ் செயல்படும் அனைத்து கதா் அங்காடிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தொடங்கப்பட்டுள்ள தற்காலிக கதா் விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் கதா் ரகங்களை வாங்கி, கிராமப்புற நூற்பாளா்கள் மற்றும் நெசவாளா்களின் வளா்ச்சிக்கு துணை நிற்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT