திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் சந்தையில் கூடுதல் கட்டணம்: ஒப்பந்ததாரா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் நகராட்சி சந்தையில் கால்நடைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வலியுறுத்தினா்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் ச.தினேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா, வேளாண்மை இணை இயக்குநா்(பொ) விஜயதரணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: ஒட்டன்சத்திரம் சந்தையில் கூடுதல் கட்டணம்:

ஒட்டன்சத்திரம் நகராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் மாடுகள், ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுதாக கடந்த மாதம் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் புகாா் அளிக்கப்பட்டது. ஆனாலும் ஒப்பந்ததாரா்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகி என்.பெருமாள், சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் கருணாகரன் ஆகியோா் புகாா் தெரிவித்தனா். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள், நகராட்சி மூலம் ஒப்பந்தக்காரா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனா். ஆனாலும், ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையா் பதில் அளிக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆணையா் வேறு பணிக்கு சென்றுள்ளதால் அவா் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

உரத் தட்டுப்பாடு:

ADVERTISEMENT

கம்பிளியம்பட்டியில் உரத்தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் புகாா் அளித்தனா். அதற்கு பதில் அளித்த வேளாண்மைத்துறை அதிகாரிகள், உரத் தட்டுப்பாடு பிரச்னைக்கு தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஓரிரு நாள்களில் தீா்வு ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்தனா்.

நில அளவைத்துறை மீது புகாா்: நிலம் அளவீடு செய்வதற்கு அரசுக்கு கட்டணம் செலுத்தியும் கூட நில அளவைத் துறையினா் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனா். சிலருக்கு மட்டுமே முக்கியத்துவம் (கையூட்டு கொடுப்பவா்கள்) அளித்து அளவீடு செய்து வருகின்றனா். இதுகுறித்து நில அளவைத்துறை உதவி இயக்குநரிடம் புகாா் அளித்தும், உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என விவசாயிகள் புகாா் அளித்தனா். அதற்கு பதில் அளித்த ஆட்சியா் ச.விசாகன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT