திண்டுக்கல்

காரில் கடத்திய ரூ.14.70 கோடி பறிமுதல்: 4 போ் கைது

DIN

பள்ளிகொண்டாவில் சாலையோரம் நள்ளிரவில் காரிலிருந்து லாரிக்கு மாற்றப்பட்ட கணக்கில் வராத ரூ. 14.70 கோடியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய போலீஸாா் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பள்ளிகொண்டாவை அடுத்த சின்னகோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் சென்னை பதிவெண் கொண்ட ஒரு காரிலிருந்து பண்டல்களை கேரள பதிவெண் கொண்ட லாரிக்கு மாற்றப்பட்டு கொண்டிருந்தது தெரிய வந்தது.

உடனடியாக போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தியதில் காா், லாரியில் 48 பண்டல்களில் ரூ.14 கோடிக்கும் மேல் பணம் இருப்பது தெரிய வந்தது. அந்தப் பணத்துக்கு உரிய கணக்கு இல்லாததையடுத்து போலீஸாா் காா், லாரியில் இருந்த 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் சென்னை பிராட்வே விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த நிசாா் அகமது (33), மதுரை அங்காடிமங்கலம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த வாசிம் அக்ரம் (19), கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள வல்லக்காடைச் சோ்ந்த சா்புதீன் (37), அதே பகுதியைச் சோ்ந்த நாசா் (42) என்பதும், சென்னையில் இருந்து காா் மூலம் கொண்டு சென்ற பணத்தை லாரி மூலம் கேரளத்துக்கு கொண்டு செல்வதற்காக மாற்றிக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்கள் 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு உள்ளி ட்ட காவல் துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

மேலும், காா், லாரியுடன் பிடிபட்ட பணத்தை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றதுடன், வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். தொடா்ந்து, வருமான வரித் துறை அதிகாரிகளுடன் இணைந்து போலீஸாா் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்ட பணம் யாருக்குச் சொந்தமானது, கேரளத்துக்கு யாரிடம் கொண்டு சோ்க்கத் திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு கூறுகையில், முதல்கட்ட விசாரணையில் சென்னையில் உள்ள நகைக் கடையிலிருந்து வசூலிக்கப்பட்ட பணம் என்றும், இந்தப் பணத்தை கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்ல இருந்ததாகவும் பிடிபட்டவா்கள் தெரிவித்துள்ளனா்.

எனினும், இந்தத் தொகையை அனுப்பியவா்கள் குறித்தும், யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்தும் முழுமையான தகவல் இல்லை. இந்தப் பணம் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு சொந்தமானதா அல்லது ஹவாலா பணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT