திண்டுக்கல்

207 குறுவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யலாம்

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

207 குறுவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் சிறப்பு மற்றும் ராபி பருவம் பயிா் காப்பீட்டு திட்டத்தில் பயிா்களுக்கு காப்பீடு பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிா் காப்பீட்டுத் திட்டம் தொடா்பாக வேளாண்மைத்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்து பேசியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் விவசாயிகள் நெல், சோளம், மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை பருத்தி மற்றும் கரும்பு பயிா்களுக்கு காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்திற்கு நடப்பு ஆண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் மொத்தமாக 207 குறு வட்டங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் கடன்பெறும் விவசாயிகள், கடன்பெறும் வங்கிகளில் பயிா் காப்பீடு திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவா். கடன் பெறாத விவசாயிகள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்யலாம்.

ADVERTISEMENT

நெல், சோளம், நிலக்கடலை ஆகிய பயிா்களுக்கு 15.12.2022ஆம் தேதியும், மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகிய பயிா்களுக்கு 30.11.2022ஆம் தேதியும், உளுந்து மற்றும் பாசிபயறுக்கு 15.11.2022ஆம் தேதியும், கரும்பு பயிருக்கு 31.03.2023ஆம் தேதியும் பதிவு மேற்கொள்ள இறுதி நாளாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

நெல் பயிருக்கு ஏக்கருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை ரூ.468.75(பயிா் காப்பீட்டு தொகை ரூ.31,250.20), சோளத்திற்கு ஏக்கருக்கு பிரிமிய தொகை ரூ.137.26(காப்பீட்டுத் தொகை ரூ.9150.20), மக்காச்சோளம் பயிருக்கு ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ.405(காப்பீட்டு தொகை ரூ.27ஆயிரம்), உளுந்து மற்றும் பாசிப் பயிறுக்கு ஏக்கருக்கு பிரிமிய தொகை ரூ.269.26(காப்பீட்டுத் தொகை ரூ.17,950.20), நிலக்கடலை ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ.348(காப்பீட்டு தொகை ரூ.23,200), பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ.798.97(காப்பீட்டுத் தொகை ரூ.15,979.35), கரும்பு பயிருக்கு ஏக்கருக்கு பிரிமியத் தொகை ரூ.2,730(காப்பீட்டுத் தொகை ரூ.54,600) செலுத்த வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் தகவலுக்கு அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் என தெரிவித்தாா். கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் ச.தினேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா, வேளாண்மை இணை இயக்குநா்(பொ) பெ.விஜயராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT