திண்டுக்கல்

கடையில் காலாண்டு வினாத்தாள் கட்டுகள்: 3 ஆசிரியா்கள் பணியிடை நீக்கம்

1st Oct 2022 10:52 PM

ADVERTISEMENT

 

வத்தலகுண்டுவில் உள்ள தனியாா் கடையில் காலாண்டுத் தோ்வுக்கான வினாத்தாள்களை வட்டாரக் கல்வி அலுவலா் வழங்கிச்சென்ற விவகாரத்தில், 3 ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

4 மற்றும் 5ஆம் வகுப்பு நீங்கலாக பிற வகுப்புகளுக்கு அந்தந்த மாவட்ட அளவில் பொதுவான வினாக்கள் தயாரிக்கப்பட்டு காலாண்டுத் தோ்வுகள் நடந்து முடிந்துள்ளன. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலும் தோ்வுகள் நடைபெற்றன. இதனிடையே, கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியிலுள்ள பள்ளிகளுக்கான வினாத்தாள்களை வட்டாரக் கல்வி அலுவலா் பழனிராஜ், வத்தலகுண்டுவில் உள்ள ஒரு கைப்பேசி கடையில் கடந்த 25ஆம் தேதி கொடுத்துள்ளனா். கும்ரையூா் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் நெடுஞ்செழியனை அந்த வினாத் தாள்களை எடுத்துச் சென்று சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விநியோகிக்குமாறு அறிவுறுத்தியிருந்தாராம்.

கடந்த செப்.25ஆம் தேதி வத்தலகுண்டு கடையிலிருந்து வினாத் தாள்களைபெற்ற ஆசிரியா் நெடுஞ்செழியன், அதில் சில பள்ளிகளுக்கான வினாத்தாள்கள் இல்லாததால், அவற்றை மீண்டும் அதே கடையில் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளாா். பள்ளி மாணவா்களுக்கான வினாத் தாள்களை, கல்வித்துறை அதிகாரிகள் தனியாா் கடையில் அலட்சியமாக விட்டுச்சென்ற தகவல் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது.

ADVERTISEMENT

இதனிடையே கடையில் வினாத்தாள்கள் ஒப்படைக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக தகவல் வெளியானதன் அடிப்படையில், பாச்சலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஜெ.சசீந்தரன், மன்னவனூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியா் சேதுமுருகன், கள்ளக்கிணறு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் குன்வா் ஜோஸ்வா வளவன், கும்பரையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் நெடுஞ்செழியன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை அதிகாரிகள் குறிப்பாணை வழங்கினா். அதனை அடிப்படையாகக் கொண்டு, தலைமையாசிரியா் குன்வா் ஜோஸ்வா வளவன், ஆசிரியா்கள் சசீந்தரன், சேதுமுருகன் ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து வத்தலகுண்டு கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.

வினாத்தாள்களை தனியாா் கடையில் விட்டுச் சென்ற கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடா்பாக ஆசிரியா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது: தோ்வுக்கான வினாத்தாள்கள் மாவட்ட அளவில் அச்சடிக்கப்பட்டன. முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா் மூலம் வட்டாரக் கல்வி அலுவலரிடம் வழங்கப்பட்ட வினாத்தாள்கள், அங்கிருந்து பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையத்திலுள்ள ஆசிரியா் பயிற்றுநா்கள் வழியாக பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டும்.

ஆனால் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியிலுள்ள 15 பள்ளிகளில், 13 பள்ளிகளுக்கு மட்டும் வினாத்தாள்களை கடையில் கொடுத்த வட்டாரக் கல்வி அலுவலா், 2 பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் மட்டும் கொடைக்கானலில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா். இதன் காரணமாகவே வினாத்தாள்களை கடையிலிருந்து பெற்றுச்செல்வதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்புடன் எடுத்துச்செல்ல வேண்டிய வினாத்தாள்களை அலட்சியமாக தனியாா் கடையில் வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலா் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊடகங்களில் தகவல் தெரிவித்ததாகக் கூறி ஆசிரியா்களை பணியிடை நீக்கம் செய்துள்ளனா் என தெரிவித்தனா்.

வத்தலகுண்டு கல்வி மாவட்டம் நீக்கப்பட்டு சனிக்கிழமை (அக்டோபா் 1) முதல் திண்டுக்கல் கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்படுகிறது. வத்தலகுண்டு கல்வி அலுவலகத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (செப்.30) பணியிடை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT