திண்டுக்கல்

தோட்டக்கலைப் பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்

1st Oct 2022 10:53 PM

ADVERTISEMENT

 

திண்டுக்கல் மாவட்டத்தில் வாழை, கத்திரி, வெங்காயம், வெண்டை மற்றும் மிளகாய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் பெருமாள்சாமி தெரிவித்துள்ளதாவது: பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் மாநில அரசின் மானியத்துடன் ராபி 2022-பருவத்தில் (அக்டோபா் முதல் பிப்ரவரி வரை) தோட்டக்கலைப் பயிா்களான வெங்காயம், கத்திரி மற்றும் சிகப்பு மிளகாய் பயிா்களுக்கு ஆத்தூா், நிலக்கோட்டை, குஜிலியம்பாறை, வேடசந்தூா், வடமதுரை, பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் மற்றும் ரெட்டியாா்சத்திரம் வட்டாரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது.

பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டு தோட்டக்கலைப் பயிா்களான வாழை, வெங்காயம், கத்திரி, வெண்டை மற்றும் மிளகாய் ஆகிய பயிா்களுக்கு பயிா்க் காப்பீடு செய்யலாம். வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3008.46 பிரிமியம் தொகையை 2023 பிப்ரவரி 28 ஆம் தேதி வரை செலுத்தலாம். கத்திரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.876.86 பிரிமியம் தொகையினை 2023 ஜனவரி 18 ஆம் தேதிவரை செலுத்தலாம். வெங்காயப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1820.40 பிரிமியம் தொகையினை 2023 ஜன.31ஆம் தேதி வரையிலும், வெண்டை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.669.38 பிரிமியம் தொகையினை 2023 பிப்.15ஆம் தேதிவரையிலும், மிளகாய் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1249.82 பிரிமியம் தொகையினை 2023 ஜன.31ஆம் தேதிவரையிலும் செலுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்.

ADVERTISEMENT

இந்தப் பயிா்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் விண்ணப்பத்துடன் பதிவுக் கட்டணம், சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பொதுசேவை மையங்கள் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம் அகியவற்றின் மூலம் பயிா்காப்பீடு செய்யலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதியிலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT