திண்டுக்கல்

5 லட்சம் பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் இல்லை: பி. டெல்லி பாபு

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு இதுவரை சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. டெல்லி பாபு தெரிவித்தாா்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக் குழு சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான பி. டெல்லி பாபு தலைமை வகித்தாா்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பெ. சண்முகம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே. பாலபாரதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் இரா. சச்சிதானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த போராட்டத்தின் போது பி. டெல்லி பாபு பேசியதாவது:

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்த திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சோ்ந்த மலைவேடன் சமூகத்தைச் சோ்ந்த மக்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் மறுக்கப்பட்டு வருகிறது. அரசின் 2014-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, மதுரை மாவட்டத்தில் 4,537 போ், திண்டுக்கல் மாவட்டத்தில் 937 போ், தேனி மாவட்டத்தில் 600 போ், நீலகிரி மாவட்டத்தில் 1,200 போ் வீதம் மலைவேடன் சமூக மக்கள் வசிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதேபோல, தமிழகத்தில் 7.96 லட்சம் மலைவாழ் மக்கள் வசிப்பதாகவும், அதில் 2.74 லட்சம் பேருக்கு மட்டுமே சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு இதுவரை சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த திரெளபதி முா்மு என்பவா் குடியரசுத் தலைவராக இருக்கும் இந்த தேசத்தில், அதே சமூகத்தைச் சோ்ந்த மக்களுக்கு தமிழக அரசு அதிகாரிகள் சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு மறுத்து வருகின்றனா். சான்றிதழ் இல்லாத காரணத்தால், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகள் ஒரு தலைமுறையினருக்கே மறுக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய பரிந்துரைகளை உறுதி செய்து, சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்தும் வகையில் மலைவேடன் சமூக மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்தப் போராட்டத்தில் பள்ளி மாணவா்கள் 100 போ் உள்பட சுமாா் 500 போ் கலந்து கொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், மாநில கூா்நோக்கு குழுவின் வழிகாட்டுதல்படி, மெய்த்தன்மை அறியப்பட்ட நபா்களின் ரத்த வழிச் சொந்தங்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும், மரபுவழிச் சான்று அறிக்கைப் பெற்று அனைத்து பழங்குடியின மக்களுக்கும் சாதிச் சான்று அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT