திண்டுக்கல்

மனைவியை கொலை செய்த கணவா் கைது: மறியலுக்கு முயன்ற மேலும் 4 போ் கைது

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

குஜிலியம்பாறை அருகே மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவா், சமயபுரம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்துள்ள பூத்தாம்பட்டியைச் சோ்ந்த ராஜசேகா். இவரது மனைவி தேவிகா (32). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, குஜிலியம்பாறையை அடுத்துள்ள அரண்மனையூரில் உள்ள தனது தாய் வீட்டில் தேவிகா வசித்து வந்தாா்.

இந்த நிலையில், அரண்மனையூருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற ராஜசேகா், தேவிகாவை சந்தித்து பேச முயன்றபோது மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ராஜசேகா் கத்தியால் தேவிகாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டாா். பலத்த காயமடைந்த தேவிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து எரியோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதனிடையே, திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையத்தில் ராஜசேகா் திங்கள்கிழமை சரணடைந்தாா். தகவல் அறிந்த எரியோடு போலீஸாா், திருச்சிக்கு சென்று ராஜசேகரை திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்தனா்.

ADVERTISEMENT

மறியலுக்கு முயன்ற ஆதித் தமிழா் பேரவையினா் கைது:

இதனிடையே, திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன் தேவிகாவின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை மறிக்க முயன்ற ஆதித் தமிழா் பேரவையின் மாநில கொள்கை பரப்புச் செயலா் தலித் சுப்பிரமணி, மாவட்டத் தலைவா் வினோத், அரண்மனையூரைச் சோ்ந்த சரவணன், விஜயகுமாா் ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தப்பட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT