ஆட்சியா் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மனுக்கள் பதிவேற்றம் செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில், குடிநீா் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திங்கள்கிழமைதோறும் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகின்றனா்.
ஆட்சியா் அலுவலக தரைத் தளத்திலுள்ள கணினி அரங்கில் மனுக்களை பதிவு செய்து பின்னா், கூட்ட அரங்குக்கு சென்று ஆட்சியரிடம் பொதுமக்கள் மனுக்களை வழங்கி வருகின்றனா். இதுபோன்ற சூழலில், கணினியில் மனுக்களைப் பதிவேற்றும் செய்யும் பணியில் தாமதம் ஏற்படுவதால், பொதுமக்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆட்சியா் அலுவலகத்தில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு குடிநீா் வசதி கூட இல்லாததால் மனு அளிக்க வருவோா் அதிருப்தி அடைந்தனா். எனவே, குடிநீா் வசதி ஏற்படுத்திக் கொடுக்கவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.