திண்டுக்கல்

பெண் கொலை: லாரி ஓட்டுநா் கைது

27th Nov 2022 11:44 PM

ADVERTISEMENT

 

திண்டுக்கல் அருகே இளம் பெண் ஒருவரை குத்திக் கொலை செய்த லாரி ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அருகேயுள்ள சிலுவத்தூரைச் சோ்ந்தவா் சக்திவேல். கூலித் தொழிலாளி. இவரது மனைவி லெட்சுமி (34). சக்திவேல்-லட்சுமி தம்பதியா் இருவரும் அதே பகுதியில் சனிக்கிழமை நடந்து சென்றனா்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிலுவத்தூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சிவக்குமாா்(45), சக்திவேல் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து, சனிக்கிழமை இரவு சக்திவேலின் வீட்டுக்குச் சென்ற சிவக்குமாா், உளியால் லட்சுமியின் கழுத்தில் குத்தியுள்ளாா். அதில் பலத்த காயமடைந்த லட்சுமி, அதே பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே லட்சுமி உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக சாணாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திண்டுக்கல் பா்மா காலனியிலுள்ள உறவினா் வீட்டில் பதுங்கியிருந்த சிவக்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சாலை மறியல்:

இதனிடையே, லட்சுமியின் உடல், கூறாய்வுக்காக வைக்கப்பட்டிருந்த திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பாக திரண்ட அவரது உறவினா்கள், நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT