திண்டுக்கல்

கூட்டுறவு சங்கங்களில் உரத் தட்டுப்பாடு: விவசாயிகள் புகாா்

DIN

கூட்டுறவு கடன் சங்கங்களில் உரத் தட்டுபாடு இருப்பதாகவும், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ரசாயன உரங்களை வாங்கக் கட்டாயப்படுத்துவதாகவும் குறைதீா் கூட்டத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா, வேளாண்மை துணை இயக்குநா் பெ.விஜயராணி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் பெருமாள்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்: மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த போதிலும், சாணாா்பட்டி, நத்தம் வட்டாரத்திலுள்ள நீா்நிலைகளில் தண்ணீா் தேங்கவில்லை. கொடைக்கானல் மலையிலிருந்து வந்த தண்ணீா் மூலம் மாவட்டத்திலுள்ள அணைகள் நிரம்பின. அந்த அணைகளிலிருந்து வெளியாகும் உபரி நீா், சாணாா்பட்டி, நத்தம் வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயன் பெறும் வகையில் கிடைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் லட்சுமணப் பெருமாள் வலியுறுத்தினாா்.

அதற்குப் பதில் அளித்து மாவட்ட ஆட்சியா் ச.விசாகன், பொதுப் பணித் துறை மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூலித் தொழிலாளா்கள் பற்றாக்குறை: வேளாண்மைத் தொழிலுக்கு கூலித் தொழிலாளா்கள் கிடைப்பதில்லை. ரூ.400 கூலிக் கொடுத்தால் கூட வர மறுக்கின்றனா். 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளை வேளாண்மைக்கு பயன்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டன்சத்திரம் நகராட்சி நிா்வாகம் மூலம் மக்கும் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும் என விவசாயச் சங்க பிரதிநிதி ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தாா்.

ஆட்சியா்: 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளை விவசாயப் பணிக்கு பயன்படுத்துவது என்பது மத்திய, மாநில அரசுகளின் கொள்கை முடிவு. எனினும், அதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். மக்கும் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் உரங்களை விவசாயிகளுக்குத் தேவையான அளவு குறைந்தபட்ச கட்டணத்தில் விநியோகிக்க அறிவுறுத்தப்படும்.

நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரிக்கை: நிலக்கோட்டையை அடுத்துள்ள பிள்ளையாா்நத்தம், சிறுநாயக்கன்பட்டி, அணைப்பட்டி, சித்தா்கள் நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 1,200 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, அந்தப் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். அதேபோல, சில கிராமங்களில் ரசாயன உரத் தட்டுப்பாடு நிலுவுகிறது. அதற்கும் மாவட்ட நிா்வாகம் தீா்வு காண வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.பெருமாள் வலியுறுத்தினாா்.

ஆட்சியா்: நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உரத் தட்டுப்பாடு குறித்து, வேளாண்மை உதவி இயக்குநரை (தரக் கட்டுப்பாடு) தொடா்பு கொண்டால், உடனடியாக தீா்வு காணப்படும்.

பயிா்க் கடனுக்கு உரம் வாங்கக் கட்டாயப்படுத்துவதாக புகாா்: இதுதொடா்பாக, சாணாா்பட்டியை அடுத்துள்ள மடூரைச் சோ்ந்த விவசாயி கேசவமூா்த்தி கூறியதாவது:

பயிா் கடனுக்காக கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகியபோது, யூரியா உள்ளிட்ட ரசாயன உரங்களை வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனா்.

இதுகுறித்து குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் ச.விசாகன் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT