பழனியில் வீட்டை உடைத்து நகைகளை திருடிய மதுரையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சுமாா் ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகளை மீட்டனா்.
பழனி நேதாஜி நகரைச் சோ்ந்த ரங்கநாதன், கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியூா் சென்றுவிட்டு 2 நாள்கள் கழித்து வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 22 பவுன் தங்க நகைகள், ஒரு வைர மோதிரம், கைப்பேசி ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், பழனி நகா் போலீஸாா் வழக்குப் பவுவ செய்து ஆந்திரத்தில் தலைமறைவாக இருந்த, மதுரை எஸ்.எஸ். காலனியைச் சோ்ந்த சுரேஷ் குமாா் (38) என்பவரைக் கைது செய்தனா். மேலும் சுமாா் ரூ. 6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், கைப்பேசி ஆகியவற்றை மீட்டனா்.
சுரேஷ்குமாா் மீது சென்னை நந்தம்பாக்கம், முத்தா புதுப்பேட்டை, பட்டாபிராமம், கோயம்புத்தூா் அன்னூா் காவல் நிலையம், திருமங்கலம், கா்நாடக மாநிலத்தில் ஷிமோகா மாவட்டத்திலும், சாம்ராஜ் நகா் மாவட்டத்திலும் திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன என போலீஸாா் தெரிவித்தனா்.