கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக மழை காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால், கடந்த ஒரு வாரமாக மழை இல்லாமல் பனிப் பொழிவு நிலவி வருகிறது. இதனால், கடந்த இரண்டு நாள்களாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், வியாபாரிகள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். சுற்றுலாப் பயணிகள், வெள்ளி நீா் வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், மோயா் பாயிண்ட், தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா, குணா குகை, கோக்கா்ஸ்வாக், வட்டக்கானல் அருவி, பாம்பாா் அருவி உள்ளிட்ட இடங்களைப் பாா்த்து ரசித்தனா்.
சுமாா் ஒரு மாதத்துக்குப் பிறகு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததால், ஏரிச்சாலை, கலையரங்கம், செவண்ரோடு, லாஸ்காட் சாலை, செயிண்ட்மேரீஸ் சாலை, அப்சா்வேட்டரி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.