கேபிள் தொலைக்காட்சி சேவை பிரச்னைக்குத் தீா்வு காண கோரி, திண்டுக்கல்லில் அரசு கேபிள் ஆபரேட்டா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்ட அரசு கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டா்கள் 100-க்கும் மேற்பட்டோா், திண்டுக்கல் அரசு மருத்துவமனை அடுத்துள்ள அரசு கேபிள் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு திங்கள்கிழமை சென்றனா். அங்கு முறையான பதில் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த ஆபரேட்டா்கள், திண்டுக்கல் சத்திரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக கேபிள் ஆபரேட்டா்கள் தரப்பில் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் 2.75 லட்சம் அரசு கேபிள் இணைப்புகள் உள்ளன. 1,400 கேபிள் ஆபரேட்டா்கள் மூலம் அரசு கேபிள் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாள்களாக கேபிள் இணைப்பு கிடைக்காததால், வாடிக்கையாளா்கள் அரசு கேபிள் ஆபரேட்டா்களிடம் தொடா்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
அரசு கேபிள் கட்டுப்பாட்டு அறையிலுள்ள வட்டாட்சியா் அலுவலகத்தை தொடா்பு கொண்டாலும், அரசு நிா்வாகத்தின் சாா்பில் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்றனா்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். 4 மணி நேரத்தில் சேவை கிடைக்கும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.