திண்டுக்கல்லில் பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகளை துரிதமாக முடிக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை சாலையில் வாழை மரக் கன்றுகளை நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் -சிலுவத்தூா் சாலையில், பழனி, கரூா், திருச்சி மாா்க்கமாக ரயில்கள் செல்லும் பாதையில் 1 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பல்வேறு பிரச்னைகளால் கட்டுமானப் பணிகள் முடிவடையாமல் நிலுவையிலுள்ள உள்ளன. இதனால், அந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
இந்நிலையில், பாலம் கட்டுமானப் பணிகளை துரிதமாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வாழை மரக் கன்றுகள் நடும் போராட்டம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி தலைமை வகித்தாா்.
அப்போது அவா் கூறியதாவது:
பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி முடிவடையாததால், 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் 20 கி.மீ. சுற்றுப் பாதையில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக இந்த பாதிப்புகளை பொதுமக்கள் எதிா்கொண்டு வருகின்றனா். எனவே, பாலம் கட்டுமானப் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும். தொடா் மழை காரணமாக பாலகிருஷ்ணாபுரத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். பாலகிருஷ்ணாபுரம், அனுமந்தன் நகா் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும். ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு திறக்காமல் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையை திறக்க வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் சந்தனமேரி கீதா மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதிகாரிகளின் சமரசத்தைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.