கொடைக்கானலில் தொடா் மழையால் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த நான்கு நாள்களாக மழை பெய்து வந்த நிலையில், மலைச் சாலைகளில் சிறு, சிறு அருவிகள் தோன்றியுள்ளன. வெள்ளிநீா் அருவி, பியா் சோழா அருவி, பேரி பால்ஸ் அருவி, வட்டக்கானல் அருவி, மூலையாா் அருவி, ரேக்டைல்ஸ் அருவி, செண்பகா அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து இருந்தது. தொடா் மழை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்தது. சுற்றுலா இடங்கள் அனைத்தும் வெறிச் சோடிக் காணப்பட்டன. இதனால் சிறு வியாபாரிகள் பாதிப்படைந்தனா்.
தொடா் மழையின் காரணமாக கிராமப் பகுதிகளான கோம்பை,
அடிசரை, மூங்கில்காடு பகுதிகளில் உள்ள ஓடைகளில் அதிக அளவு தண்ணீா் செல்வதால் வனப் பகுதிகளையொட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளிலுள்ள மக்கள் வெளியே செல்ல முடியாமல் உள்ளனா். மேலும், பள்ளிக் குழந்தைகள் இரண்டு வாரங்களுக்கு மேலாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனா். இதனால், அவா்களது படிப்பு பாதிப்புக்குள்ளாகி வருகிறது.