பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குள் மகனுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள சின்ன கலையம்புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் நிா்மலா (54). இவரது மகன் ராஜூ (11). இவா்கள் இருவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் முதல் தளத்திலுள்ள கூட்ட அரங்குக்கு சென்ற நிா்மலா தனது மகனுடன் மாவட்ட வருவாய் அலுவலா், அதிகாரிகள் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா், தீக்குளிப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்தினா்.
பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில் நிா்மலா கூறியதாவது:
சின்ன கலையம்புத்தூா் பகுதியில் 1,980 சதுர அடி வீட்டு மனையை கடந்த 2004-ஆம் ஆண்டு வாங்கினேன். அந்த இடத்தில் முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளேன். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் எனக்குத் தெரியாமல், அந்த வீட்டை மற்றொரு நபருக்கு மோசடியாக விற்றுவிட்டனா். இதில், எனது கணவா் சின்னத்துரையும் ஈடுபட்டுள்ளாா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய விசாரணை நடத்தி எனது வீட்டை மீட்டுத் தரவும், போலியாகப் பதிவு செய்த பத்திரப் பதிவை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
விசாரணைக்கு பின், நிா்மலா, அவரது மகன் ராஜூ ஆகியோரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும் தற்கொலைக்கு முயன்ாக தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி பெண் மண்ணெண்ணெய் கேனுடன் முதல் தளத்திலுள்ள கூட்ட அரங்குக்குச் சென்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.