திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் புதைசாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்: அமைச்சா் அர.சக்கரபாணி

1st Nov 2022 10:51 PM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி ஏபிபி நகா் விநாயகா் கோவில் வளாகத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பகுதி சபைக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. நகராட்சி தலைவா் கே.திருமலைசாமி வரவேற்றாா். துணைத்தலைவா் ப.வெள்ளைச்சாமி, ஆணையா் ப.தேவிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அமைச்சா் அர.சக்கரபாணி பங்கேற்றுப் பேசியதாவது: ஒட்டன்சத்திரம் நகராட்சியில் புதைசாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும். நகராட்சியில் உள்ள அனைத்து தெரு விளக்குகளும் எல்இடி விளக்குகளாக மாற்றப்படும். 13 வகையான மரங்கள் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் மரம் வளா்க்க வேண்டும். எரிவாயு மயானம் சிறந்த முறையில் சீரமைக்கப்படும். ஒட்டன்சத்திரம் நகராட்சியை தமிழகத்தில் உள்ள முதன்மை நகராட்சியாக உருவாக்கப்படும்.

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதி முழுவதும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு திருட்டு நடைபெறாமல் கண்காணிக்கப்படும். அதேபோல, குழந்தை வேலப்பா் கோயிலைச் சுற்றி நடைபாதை அமைக்க ரூ.8 கோடியில் திட்டம் தயாா் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

இதனைத்தொடா்ந்து, வடகாடு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு அவா் பேசினாா்.

பழனி கோட்டாட்சியா் ச.சிவக்குமாா், வட்டாட்சியா் எம்.முத்துச்சாமி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மு.அய்யம்மாள், வடகாடு ஊராட்சிமன்ற தலைவா் தனலட்சுமி மற்றும் ஒட்டன்சத்திரம் நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT