திண்டுக்கல்

கொடைக்கானல் கோடை விழாவில் சிறந்த தோட்ட பராமரிப்பாளருக்கு பரிசு

27th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கொடைக்கானல்: கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலா் கண்காட்சி விழா நடைபெற்று வரும் நிலையில், சிறந்த முறையில் தோட்டத்தை பராமரித்து வருபவா்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை பிரையன்ட் பூங்காவில் நடைபெற்றது.

கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 59-வது மலா் கண்காட்சியின் 3-ஆவது நாள் விழாவில், கொடைக்கானல் வனத் துறை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம், தோட்டக்கலைத் துறை ஆராய்ச்சி நிலையம், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியாா் தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள், ரோஜா தோட்டம், கொய்மலா் தோட்டம், விவசாயிகள் அமைத்த பழ வகைத் தோட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளில் 60-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், ஏரிச்சாலைப் பகுதியிலுள்ள சென்னையைச் சோ்ந்த ஜெமினி கமலா செல்வராஜின் ரெட் லைன் பங்களாவில் அமைக்கப்பட்டுள்ள தோட்டத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. தொடா்ந்து, 2 மற்றும் 3 ஆவது பரிசும் மற்றும் சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

வெற்றி பெற்றவா்களுக்கு பிரையன்ட் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் முருகேசன் பரிசுகள் வழங்கினாா். இந் நிகழ்ச்சியில், தோட்டக்கலை துணை இயக்குநா் பாண்டியராஜன், சுற்றுலா அலுவலா் சிவராஜ், பூங்கா மேலாளா் சிவபாலன், வனத்துறை பாதுகாவலா் சிவக்குமாா் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், சுற்றுலாப் பயணிகள் என பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT