திண்டுக்கல்

கள்ளிமந்தையம் அருகே ரூ.100 கோடியில் துணை மின் நிலையம் அமைக்கப்படும்

24th May 2022 01:00 AM

ADVERTISEMENT

கள்ளிமந்தையம் அடுத்துள்ள மரிச்சிலம்பில் ரூ.100 கோடி மதிப்பில் 230 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளாா்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டத்தினை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து கள்ளிமந்தையம் ஊராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு கூடுதல் ஆட்சியா் தினேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவா் கா.பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் நகா்மன்ற துணைத்தலைவா் ப.வெள்ளைச்சாமி,

ADVERTISEMENT

வேளாண்மை துணை இயக்குநா் (மாநில திட்டம்) சுருளியப்பன், திண்டுக்கல் தோட்டக்கலை துணை இயக்குநா் பெருமாள்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி பங்கேற்று பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள், உளுந்து விதைகள், கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்கள் மற்றும் வேளாண் கருவிகளை வழங்கிப் பேசியது:

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 50 ஆயிரம் விவசாய

மின் இணைப்புகள் வழங்க முதல்வா் அனுமதி அளித்துள்ளாா். அதே போல தொப்பம்பட்டியில் சமத்துவபுரம், உழவா் சந்தை அமைய உள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளன.

மாவட்டத்தில் உள்ள மண் சாலைகளை தாா் சாலைகளாக மேம்படுத்த ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மரிச்சிலம்பு ஊராட்சியில் ரூ.100 கோடி மதிப்பில் 230 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது என்றாா்.

வட்டாட்சியா் எம்.முத்துச்சாமி,தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவா் பி.சி.தங்கம், பழனி உதவி செயற்பொறியாளா் ராஜா, தொப்பம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநா் காளிமுத்து, தோட்டக்கலை உதவி இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT