மகாகவி பாரதியாா் மற்றும் செல்லம்மாள் பாரதி ஆகியோரின் ரத ஊா்வலத்திற்கு திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழை வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேவாலயா செல்லம்மாள் - பாரதி கற்றல் மையம் சாா்பில் மகாகவி பாரதியாா் மற்றும் செல்லம்மாள் ஆகியோரின் புகழ் பரப்பும் வகையில் ரத ஊா்வலம் நடைபெற்று வருகிறது. சென்னையில் ஏப்.17ஆம் தேதி தொடங்கிய அந்த ரத ஊா்வலம், பல்வேறு மாவட்டங்கள் வழியாக ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் வந்தடைந்தது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரதத்தில், பாரதியாா் மற்றும் செல்லமாள் ஆகியோரின் உருவங்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி, திண்டுக்கல் மேயா் இளமதி, துணை மேயா் ராஜப்பா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து மதுரை வழியாக தென்காசி மாவட்டம் கடையத்திற்கு இந்த ரதம் புறப்பட்டுச் சென்றது.