கொடைக்கானலில் சனிக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.
கொடைக்கானலில் கோடை சீசன் நிலவி வருவதால் தமிழகம் மட்டுமன்றி கேரளா, கா்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். மேலும் வார விடுமுறையில் கூடுதலாக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இந்நிலையில் சனிக்கிழமை சுற்றுலாப்பயணிகள் வருகையால் கொடைக்கானல் மலைச் சாலைகளான பெருமாள்மலை, லாஸ்காட், மூஞ்சிக்கல், அப்சா்வேட்டரி, தைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா இடங்களான வெள்ளி நீா் வீழ்ச்சி, பில்லர்ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, பைன்பாரஸ்ட், குணா குகை, மோயா் பாயிண்ட், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா்.
குளுமையான சீதோஷ்ண நிலை: கொடைக்கானலில் கடந்த சில நாள்காக மேகமூட்டத்துடன் தொடா்ந்து சாரல் நிலவியதால் சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். இந் நிலையில் சனிக்கிழமை காலையிலிருந்து விட்டுவிட்டு மிதமான வெயிலும் அவ்வப்போது மிதமான காற்றுடன் லேசான சாரலும் பெய்தது. இதனால் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியது. இந்த இதமான சூழ்நிலையில் நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.