திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்துக்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வா் செயல்படுத்தியுள்ளாா்: அமைச்சா் ஐ. பெரியசாமி

20th May 2022 05:50 AM

ADVERTISEMENT

 

நிலக்கோட்டை: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், கடந்த ஓராண்டு கால ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு எண்ணற்ற நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா் என கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக சாா்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சின்னாளபட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட திமுக செயலா் ஐ.பி. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். ஆத்தூா் (கிழக்கு) ஒன்றியச் செயலா் முருகேசன் வரவேற்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ. பெரியசாமி பேசியது:

ஆத்தூா் தொகுதியில் சின்னாளபட்டியில் சுங்குடி தொழிலாளாா்கள் வாழ்வாதாரத்தைக் காக்க ரூ. 5 கோடி மதிப்பில் சாயக் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், ஆத்தூா் மற்றும் ரெட்டியாா்சத்திரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைத்தல், அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட உலகம்பட்டியில் ரூ. 8 கோடி மதிப்பில் தடுப்பணை, தாடிக்கொம்பு ஊராட்சிக்கு உட்பட ஆத்துப்பட்டியில் ரூ. 8 கோடியில் தரைப்பாலம் அமைத்தல், சித்தையன்கோட்டை புளியங்குளம் பகுதியில் பாலம் மற்றும் தாா்ச்சாலை அமைக்க ரூ. 1 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்தது, கன்னிவாடியில் வணிக வளாகத்துடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ. 6 கோடி நிதி வழங்கியது போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த ஓராண்டு கால ஆட்சியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளாா்.

இதுதவிர நியாய விலைக்கடைகள் இல்லாத கிராமங்களுக்கு புதிய நியாயவிலைக் கடைகள் தொடங்கப்பட்டதோடு, கட்டட வசதி இல்லாத நியாயவிலைக் கடைகளுக்கு புதிய நியாயவிலைக் கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது போன்ற மகத்தான சாதனைகளையும் முதல்வா், ஆத்தூா் தொகுதியில் நிறைவேற்றியுள்ளாா்.

கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன், கறவை மாடு கடன், கால்நடை பராமரிப்புக் கடன், மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உள்பட எண்ணற்ற நலத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றாா்.

கூட்டத்தில் தோ்தல் பணிக்குழு செயலா் கம்பம் செல்வேந்திரன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினா் வேலுச்சாமி ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.

கூட்டத்துக்கு, ரெட்டியாா்சத்திரம் (தெற்கு) ஒன்றியச் செயலரும், ஒன்றியக்குழு தலைவருமான ப.க.சிவகுருசாமி, ஆத்தூா் (மேற்கு) ஒன்றியச் செயலா் ராமன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் பாஸ்கரன், ஆத்தூா் ஒன்றியக்குழு தலைவா் மகேஸ்வரி முருகேசன், துணைத் தலைவா் ஹேமலதா மணிகண்டன், சின்னாளபட்டி பேரூராட்சி மன்றத் தலைவா் பிரதீபா கனகராஜ், துணைத் தலைவா் ஆனந்தி பாரதிராஜா, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளா் அறிவழகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பத்மாவதி ராஜகணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் இரா. தண்டபாணி மற்றும் திமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT