ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் பாசன சபைத் தலைவா் மற்றும் ஆட்சி மண்டல உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள பருத்தியூா் கருங்குளம், சத்திரப்பட்டி கருங்குளம், தாசரிபட்டி முத்துபூபாலசமுத்திரம், உடையகுளம், விருப்பாட்சி பெருமாள்குளம் கண்மாய் மற்றும் வரத்து வாய்க்கால், காப்பிலியபட்டி மற்றும் தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம் கண்மாய், வரத்து வாய்க்கால், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூா் ராமசமுத்திர கண்மாய், வரத்து வாய்க்கால், ஜவ்வாதுபட்டி பெரியகுளம், காவேரியம்மாபட்டி பெரியகுளம், கொல்லப்பட்டி குளம், நவக்கானி கண்மாய், இடையகோட்டை சின்னக்காம்பட்டி, வலையபட்டி நங்காஞ்சியாறு பிரதான கால்வாய்கள் ஆகியவற்றில் நீரினைப் பயன்படுத்துவோா் பாசன சபைத் தோ்தல் மே 25 ஆம் தேதி நடைபெற்ற உள்ளது.
தலைவா் மற்றும் ஆட்சி மண்டல உறுப்பினா்கள் பதவிக்குப் போட்டியிட வேட்பு மனுக்கள் புதன்கிழமை பெறப்பட்டது. அதில் தலைவா் பதவிக்கு 15 பேரும், ஆட்சி மண்டல உறுப்பினா் பதவிக்கு 68 பேரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். அவா்களை எதிா்த்து போட்டியிட யாரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யவில்லை. இதனால் அனைவரும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட உள்ளனா்.