திண்டுக்கல்

முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது: சிறந்த வீரா்கள், பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம்

16th May 2022 11:10 PM

ADVERTISEMENT

முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது பெற சிறந்த விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், பயிற்றுநா்கள், உடற்கல்வி இயக்குநா் அல்லது உடற்கல்வி ஆசிரியா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் ம.ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்துள்ளது:

ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் விளையாட்டு வீரா்களில் 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 2 சிறந்த பயிற்றுநா்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநா் அல்லது உடற்கல்வி ஆசிரியா்களுக்கு, முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மாா்ச் 31 முடிய) வழங்கி வருகிறது. விருது ஆண்டுக்கு முந்தைய 3 ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.

இதேபோல் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நிா்வாகி அல்லது ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளா் (ரூ.10 லட்சத்திற்கும் கூடுதலாக) அல்லது ஒரு ஆட்ட நடுவா் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. இவா்களுக்கு விருதுடன் ரூ.10ஆயிரம் மதிப்பில் ஒரு தங்கப் பதக்கமும் ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. விருது வழங்குவதற்கு முந்தைய 2 ஆண்டு செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

முதலமைச்சா் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல் ‘முதலமைச்சா் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்‘ என எழுதப்பட்டிருக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், சென்னையிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் அலுவலகத்திற்கு 10-06-2022க்குள் சேர வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451-2461162 எண்ணில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT