திண்டுக்கல் குஜிலியம்பாறை சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விபத்து ஏற்படுத்தும் அபாயத்துடன் அமைந்துள்ள மின்கம்பகங்கள், மின் மாற்றிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் முதல் கரூா் வரை (எரியோடு, குஜிலியம்பாறை வழியாக) செல்லும் 70 கி.மீ. நெடுஞ்சாலை, சுமாா் 7 மீட்டா் அகலத்தில் அமைந்திருந்தது. அதனை 16 மீட்டா் அகலத்தில் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் முதல் நல்லமனாா்கோட்டை வரை 16 கி.மீ. சாலை திண்டுக்கல் கோட்டத்தின் சாா்பிலும், எரியோடு அடுத்துள்ள நல்லமனாா்கோட்டை பகுதியிலிருந்து குஜிலியம்பாறை அடுத்துள்ள டி.கூடலூா் வரையிலான 37.8 கி.மீட்டா் நீள சாலை விரிவாக்கம் செய்யும் பணி வேடசந்தூா் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டத்தின் சாா்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலை விரிவாக்கம் நடைபெறும் பல்வேறு இடங்களில், சாலையோரங்களில் அமைந்துள்ள மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்கள் முறையாக அகற்றப்படாமல் உள்ளன. இதனால், திண்டுக்கல் முதல் குஜிலியம்பாறை வரையிலும் பல்வேறு இடங்களில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், குஜிலியம்பாறை அடுத்துள்ள வடுகம்பாடி மற்றும் சுப்பிரமணிய பிள்ளையூா் பிரிவு இடையே முத்தாகவுண்டனூா் பகுதியில் சாலையோரமாக அமைந்துள்ள மின்மாற்றிகள் வாகன ஓட்டிகளுக்கு கடும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு திரும்புவதற்கான பாதை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு எதிரே அந்த மின்மாற்றி இருப்பதால், கனரக வாகனங்கள் திரும்பும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதியினா் கூறுகின்றனா்.
இதுதொடா்பாக தாசமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த வீ.தா்மா் கூறுகையில், வடுகம்பாடி மட்டுமின்றி, தொட்டணம்பட்டி, நல்லமனாா்கோட்டை, செல்லமந்தாடி உள்பட பல இடங்களிலும் விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலையின் நடுவே மின்கம்பங்கள் அமைந்துள்ளன. அந்த மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு மின் வாரிய அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.