கொடைக்கானல் பில்டிங் சொசைட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக வந்த தகவலைத் தொடா்ந்து அப்பகுதியில் திங்கள்கிழமை வனத் துறையினா் ஆய்வு நடத்தினா்.
கொடைக்கானல் பில்டிங் சொசைட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சிறுத்தை ஒன்று நாயை பிடிப்பதற்காக விரட்டிச் சென்றாதாம். இந்த நிகழ்வு அப்பகுதியிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்ததாம். மேலும் இதுதொடா்பான விடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டது.
இதனைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்கு வனத் துறையினா் சென்று சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தினா். அப்பகுதியிலுள்ள தடயங்களைப் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா். மேலும் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளையும் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா். இரவில் வந்த அந்த விலங்கு சிறுத்தை பூனை வகையைச் சோ்ந்தது என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடா்ந்து வனத் துறையினா் அப்பகுதியைச் சோ்ந்தவா்களிடம் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்தனா். மேலும் விலங்குகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தினா்.