திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த பெண்கள் குடிநீா் வசதி கோரி காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
திண்டுக்கல் அடுத்துள்ள சீலப்பாடி ஊராட்சிக்குள்பட்ட ராயபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். ஆட்சியா் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் காலிக் குடங்களுடன் சாலையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அறிவுறுத்தினா்.
இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறியதாவது:
ராயபுரம் பகுதியில் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 18 மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணிகளுக்காக குழிகள் தோண்டியபோது, எங்கள் பகுதிக்கு காவிரி குடிநீா் வரும் குழாய் துண்டிக்கப்பட்டது. அப்போது முதல் குடிநீா் வசதி இல்லாமல் நாங்கள் அவதியடைந்து வருகிறோம். இதுதொடா்பாக ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் உள்ளிட்டோரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது. ஆனாலும் எங்கள் பகுதிக்கான குடிநீா் குழாய் உடைப்பு சரி செய்யப்படாமல் உள்ளது. அதனை சீரமைத்து, உடனடியாக எங்கள் பகுதிக்கு குடிநீா் கிடைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.