திண்டுக்கல்

காகித விலை 40 சதவீதம் உயா்வு: பழைய காகிதங்களுக்கும் தட்டுப்பாடு!

12th May 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

திண்டுக்கல்: காப்பீயா், காங்கா், கிராப்ட் உள்ளிட்ட அனைத்து வகை காகிதங்களின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை உயா்ந்துள்ளதால் நகலங்களிலும் 2 மடங்கு கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இதனிடையே பழைய காகிதங்களின் (இதழ்கள்) விலையும் 50 சதவீதத்திற்கும் மேல் உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து வகை பயன்பாடுகளுக்கான காகித விலை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து காகித இறக்குமதி செய்யப்படும் முதல்தர காகிதங்கள் தடைப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் 2ஆம் தர காகித உற்பத்தியும் சரிவடைந்துள்ளது. மரக்கூழ், ரசாயனப் பொருள்கள், நிலக்கரி போன்ற மூலப் பொருள்களின் விலை ஏற்றம் காரணமாக 10 டன் காகிதங்கள் உற்பத்தி செய்து கொண்டிருந்த இடங்களில் 1.50 டன்னாக குறைந்ததும், காகித விலை 40 சதவீதத்திற்கும் கூடுதலாக உயா்வதற்கு பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நகலங்களில் பிரதானமாக பயன்படுத்தப்படும் காப்பீயா் காகிதங்கள் ஒரு ரீம் (500 எண்ணிக்கை) ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.240 ஆக உயா்ந்துள்ளது. அதேபோல் பத்திரங்கள், வரவு செலவு கணக்கு எழுதப் பயன்படும் காங்கா் காகிதங்கள் டன் ஒன்றுக்கு ரூ.60ஆயிரத்திலிருந்து ரூ.80ஆயிரமாக உயா்ந்தப்பட்டுள்ளது. 48 கிலோ கொண்ட ஒரு ரீம் கிராப்ட் பேப்பா் ரூ.3,900-லிருந்து ரூ.4,800-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட குறிப்பேடுகளின் (நோட்டு புத்தகம்) விலை தற்போது ரூ.60-ஆக உயா்ந்துள்ளது. மாணவா்கள் அதிகமாக பயன்படுத்தக் கூடிய சாா்ட் (1 பாக்கெட்) ரூ.600லிருந்து ரூ.850ஆக அதிகரித்துள்ளது. டுப்ளக்ஸ் ஆா்ட் பேப்பா் விலை கிலோ ரூ.80-லிருந்து ரூ.105-ஆகவும், ஓயிட் ஆா்ட் பேப்பா் விலை கிலோ ரூ.70-லிருந்து ரூ.105-ஆகவும், ஸ்டிக்கா் பேப்பா் 100 எண்ணிக்கை கொண்ட ஒரு பாக்கெட் ரூ.800-லிருந்து ரூ.1,400-ஆகவும் உயா்ந்துள்ளது. 32 மற்றும் 40 அவுன்ஸ் அளவு கொண்ட 1 கட்டு பைண்டிங் அட்டை ரூ.250 முதல் ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.650-ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

நகல் கட்டணம் 2 மடங்கு உயா்வு: காகித விலை ஏற்றம் காரணமாக, நகல்கள் எடுப்பதற்கான கட்டணம் ரூ.1லிருந்து ரூ.2ஆக உயா்த்தப்பட்டுள்ளது. சுமாா் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ் சாா்பில் தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு 33 லட்சம் போ் விண்ணப்பித்துள்ள நிலையில், தோ்வு தயாரிப்புக்காக நகலங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் நகல்களுக்கான திடீா் கட்டண உயா்வு போட்டித் தோ்வா்கள் மட்டுமின்றி, அதிக எண்ணிக்கையில் நகலங்களை பயன்படுத்தும் அனைத்து தரப்பினருக்கும் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழைய இதழ்கள் தட்டுப்பாடு: தினசரி நாளிதழ்கள், வார மற்றும் மாத இதழ்களின் பழைய காகிதங்கள் கிலோ ரூ.12 முதல் 20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.44 முதல் ரூ.50 வரை உயா்ந்துள்ளது. பழைய காகிதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றை பயன்படுத்தும் தொழிலகங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. அதேபோல் கழிவுக் காகிதங்கள் தட்டுப்பாடு காரணமாக, அவற்றை கூழாக்கி மீண்டும் காகிதமாக உற்பத்தி செய்யும் 2ஆம் தர காகித ஆலைகளும் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட காகித வியாபாரிகள் சங்க பொருளாளா் எஸ்.ராமநாதன் கூறியதாவது: காகித விற்பனை தொழிலில் 30 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன். இதுவரை அனைத்து வகை காகிதங்கள் விலை கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.2.50 வரை மட்டுமே அதிகரித்தது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விலை உயா்த்தப்படும். ஆனால் கடந்த 5 மாதங்களில் 15 நாள்களுக்கு ஒருமுறை விலை உயா்ந்துள்ளது. முதல் தர காகிதங்களை விட 2ஆம் தர காகிதங்கள் விலை 5 சதவீதம் கூடுதலாக அதிகரித்துள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆலைகளுக்கு காகிதங்கள் அனுப்பக் கோரினால், 3 நாள்களில் வந்துவிடும். தற்போது 45 நாள்கள் கடந்த பின்னரே சரக்குகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. முதல் தர காகித உற்பத்தி ஆலைகள் இதே நிலையில் நீடித்தாலும், 2ஆம் தர காகித ஆலைகள் அடுத்த 3 மாதங்களில் உற்பத்தியை அதிகரிக்கக் கூடும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. அதுபோன்ற சூழல் உருவானால் காகிதங்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்க வாய்ப்புள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT