திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த மழை: சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கொடைக்கானல்/ பெரியகுளம்: கொடைக்கானலில் புதன்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, மலைச்சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் தற்போது பகல் நேரங்களில் வெயில் நிலவுகிறது. கடந்த 2 நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்தது. அதன்படி புதன்கிழமை இரவு 7.10-மணி முதல் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மின்தடை நீடித்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

மலைச்சாலையில் மரம் விழுந்தது:

ADVERTISEMENT

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான வடகரைப்பாறை வாழைகிரி, நண்டாங்கரை, கும்பரையூா், ஊத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் கொடைக்கானல் -வத்தலகுண்டு மலைச் சாலையில், கும்பரையூா் நண்டாங்கரை பகுதியில் மரம் விழுந்தது. இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினா், பொது மக்களின் உதவியுடன் மரத்தை அகற்றினா். அதனைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது.

பெரியகுளத்தில்...

இதேபோல, தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் புதன்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கடந்த 15 நாள்களுக்கும் மேலாக பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லாமல், மாலை நேரங்களில் வெளியே சென்று வந்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை மாலை 7 மணியாளவில் காற்றுடன்கூடிய மழை பெய்தது. 30 நிமிடங்களுக்குப் பிறகு தொடா்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் இரவு நேரத்தில் வெப்பம் தணிந்து, குளிா்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT