திண்டுக்கல்

மாநில அளவிலான கையுந்து பந்து, கூடைப்பந்து, கபடி போட்டிகள்: திருச்சி, சென்னை, திண்டுக்கல் அணிகள் சாம்பியன்

28th Mar 2022 11:23 PM

ADVERTISEMENT

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கையுந்து பந்து, கூடைப்பந்து மற்றும் கபடி போட்டிகளில் முறையே திருச்சி, சென்னை மற்றும் திண்டுக்கல் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.

டாக்டா் டி.எஸ்.சௌந்தரம் 33 ஆம் ஆண்டு நினைவாக, மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கையுந்து பந்து போட்டிகள், திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் நடைபெற்று வந்தன. கடந்த 25ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகளை, துணைவேந்தா் (பொறுப்பு) டிடி. ரங்கநாதன் தொடக்கி வைத்தாா்.

ஸ்ரீகாமராஜ், சிவசுப்ரமணியம் மற்றும் செந்தில்குமாா் 28 ஆம் ஆண்டு நினைவு மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியும், அதே நாளில் தொடங்கப்பட்டது. இதை, போட்டிகள் மற்றும் விளையாட்டுக் குழுவின் தலைவா் ஜி. பாஸ்கரன் தொடக்கிவைத்தாா். அதேபோல், 3ஆம் ஆண்டு மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டிகளை, பதிவாளா் வி.பி.ஆா். சிவக்குமாா் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

10 அணிகள் பங்கேற்ற கையுந்துப் போட்டியில், திருச்சி புனித வளனாா் கல்லூரி அணி முதலிடமும், சென்னை சத்திய பாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன அணி 2ஆவது இடமும், ஈரோடு கொங்கு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி அணி 3ஆவது இடமும், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வியல் நிறுவன அணி 4ஆவது இடமும் பிடித்தன.

ADVERTISEMENT

அதேபோல், 15 அணிகள் பங்கேற்ற கூடைப்பந்து போட்டியில், சென்னை சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன அணி முதலிடமும், கோவை பிஜிஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 2ஆவது இடமும், திருச்சி புனித வளனாா் கல்லூரி அணி 3ஆவது இடமும், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணி 4ஆவது இடமும் பிடித்தன.

தொடா்ந்து, 9 அணிகள் பங்கேற்ற கபடி போட்டியில், ஜிடிஎன் கல்லூரி அணி முதலிடமும், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக அணி 2ஆவது இடமும், மதுரை எஸ்விஎன் கல்லூரி 3ஆவது இடமும், மதுரை எஸ்என் கல்லூரி 4ஆவது இடமும் பிடித்தன.

பரிசளிப்பு நிகழ்ச்சிகள், காந்திகிராம கிராமியப் பல்கலை. வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு, துணைவேந்தா் (பொறுப்பு) டிடி.ரங்கநாதன், பதிவாளா் விபிஆா். சிவக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளா் கே. சுப்புராஜ் பங்கேற்று பரிசுத் தொகை மற்றும் கோப்பையை வழங்கினாா்.

இதில், முதலிடம் பிடித்த அணிகளுக்கு ரூ.10ஆயிரம், 2ஆம் இடம் பிடித்த அணிகளுக்கு ரூ.8ஆயிரம், 3ஆவது இடம் பெற்ற அணிகளுக்கு ரூ.6ஆயிரம், 4ஆவது இடம் பிடித்த அணிகளுக்கு ரூ.4ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT