பழனி அருகே சாலை விபத்தில் 3 போ் பலியான சம்பவத்துக்கு காரணமான காா் நிற்காமல் சென்றுவிட்டதை அடுத்து, ஆயக்குடி அருகே அந்த காா் திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த சத்திரப்பட்டியில் பழனி -திண்டுக்கல் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாதயாத்திரையாக நடந்து வந்த 5 போ் மீது காா் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், தஞ்சாவூரைச் சோ்ந்த தந்தை சாமிநாதன், மகன் கமலேஷ் மற்றும் உறவினா் சேகா் என மூன்று போ் பலியாகினா்.
விபத்தை ஏற்படுத்திய காா் நிற்காமல் சென்றுவிட்டதை அடுத்து, சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான காா் மற்றும் உரிமையாளரை தேடி வந்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை பழனி அருகே ஆயக்குடி பகுதியில் காா் ஒன்று முன்பக்கக் கண்ணாடி உடைந்த நிலையில் கேட்பாரன்றி நீண்ட நேரமாக நிற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீஸாா், அந்த காரை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனா். அதில், ஞாயிற்றுக்கிழமை இரவு விபத்தை ஏற்படுத்திய காா் என்ற விவரம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, காரின் உரிமையாளா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.