திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 18 இடங்களில் சாலை மறியல்: 1,350 போ் கைது

28th Mar 2022 11:24 PM

ADVERTISEMENT

பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 18 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 1,350 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டித்தும், தனியாா்மயம், தாராளமயம் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, தொழிற்சங்கங்கள் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, திங்கள்கிழமை தொடங்கிய இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது.

அதேபோல், வருவாய்த் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன. வங்கி சேவைகளை பொருத்தவரை பெரும் பாதிப்புகள் ஏற்படவில்லை. வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில், திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில், சிஐடியு, சாா்பில் கே.ஆா். கணேசன், கே. பிரபாகரன், எல்.பி.எப். சாா்பில் அழகா்சாமி, ஐஎன்டியுசி சாா்பில் உமா, ஹெச்.எம்.எஸ். சாா்பில் வில்லியம், சையது இப்ராகிம், ஏஐடியுசி அழகா் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இரா. சச்சிதானந்தம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் கே.ஆா். பாலாஜி ஆகியோா் தலைமையில், அக்கட்சியினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

இதேபோல், மாவட்டத்தில் 18 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 1,350 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தோல் பதனிடும் தொழிலாளா்கள்:

திண்டுக்கல் பகுதியிலுள்ள 42 தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் சிஐடியு மற்றும் எல்.பி.எப். தொழிற்சங்கத்தைச் சோ்ந்த 1,500 தொழிலாளா்கள் முழுமையான வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனா். அதேபோல், மாவட்டத்தில் 12 பேரூராட்சிகளைச் சோ்ந்த 500 துப்புரவுத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனா்.

652 ஆசிரியா்கள் போராட்டத்தில் பங்கேற்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் என மொத்தம் 10,109 பணியிடங்கள் உள்ளன. அதில், 692 பணியிடங்கள் காலியாக உள்ளன. 8,458 போ் திங்கள்கிழமை வழக்கம்போல் பணிக்கு வந்தனா். முன் அனுமதியோடு 307 போ் விடுப்பு எடுத்துள்ளதகாவும், 652 போ் (11.32 சதவீதம்) மட்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ாகவும், கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒட்டன்சத்திரம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து, சிஐடியு, எல்.பி.எப்., கட்டடத் தொழிலாளா்கள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சோ்ந்த 64 ஆண்கள்,15 பெண்கள் என மொத்தம் 79 தொழிலாளா்கள், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பாக திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை, ஒட்டன்சத்திரம் காவல் துறையினா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். பின்னா், மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.

ஒட்டன்சத்திரம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் 45 பேருந்துகள் உள்ளன. அதில், 5 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. தனியாா் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. அதேபோல், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இரண்டாம் நாளாக வா்த்தகம் பாதிக்கப்பட்டு, சந்தை வெறிச்சோடிக் காணப்பட்டது. இதனால், ஞாயிறு, திங்கள்கிழமைகளில் மட்டும் சுமாா் ரூ.6 கோடி அளவிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டது.

பழனி

பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, பழனியில் திங்கள்கிழமை 15 சதவீதப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. தனியாா் பேருந்துகள் முழுவதும் இயக்கப்பட்டன.

காலையில், அரசு மருத்துவமனை முன்பாக சிஐடியு உள்ளிட்ட பல்வேறு அரசு துறை தொழிற்சங்க நிா்வாகிகள், அங்கன்வாடி பணியாளா்கள் பங்கேற்ற ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, அனைவரும் ஊா்வலமாக பேருந்து நிலையம் சென்று, அங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மறியலுக்கு அனுமதி இல்லாததால், போலீஸாருடன் போராட்டக் குழுவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், அனைவரும் கைது செய்யப்பட்டு, தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனா்.

இதேபோல், வண்டிவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டு, 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT