பழனியில் உள்ள பல்வேறு கோயில்களில் திங்கள்கிழமை பிற்பகல் ராகு-கேது பெயா்ச்சி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
பழனி வன்னி விநாயகா் கோயில், அக்ரஹாரம் கல்யாணியம்மன் சமேத சிவபெருமான் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமானோா் பங்கேற்று அா்ச்சனைகள் செய்தனா். ராகு, கேது பெயா்ச்சிக்கு செல்லமுடியாதவா்கள், விநாயகருக்கு அா்ச்சனை செய்தால் உரிய பலனுண்டு என்பதால், பலரும் விநாயகா் கோயில்களில் அா்ச்சனைகள் செய்து வழிபட்டனா்.
மேலும், சங்கடஹர சதுா்த்தி என்பதால், பழனி சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில் திங்கள்கிழமை விநாயகப் பெருமானுக்கு பால், பஞ்சாமிா்தம், தயிா், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பலவகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல், ரயிலடி பிரசன்ன விநாயகா் கோயில், மாா்க்கெட் பட்டத்து விநாயகா் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்களிலும் சங்கடஹர சதுா்த்தி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.