பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்ட பக்தா்கள் திங்கள்கிழமை பறவைக் காவடி எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திரத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு கொடுமுடி தீா்த்தக் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தி, முருகனை வழிபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் அரிசிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த பக்தா்கள் சிலா் உடல் முழுவதும் அலகு குத்தியபடியும், கிரேன் வாகனத்தில் அந்தரத்தில் தொங்கியபடியும் பறவைக் காவடி எடுத்து வந்தனா். பின்னா், மலையடிவாரத்திலுள்ள கிரி வீதியை மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக வந்து தங்களது நேத்திக்கடனை செலுத்தி, முருகப்பெருமானை வழிபட்டனா்.