திண்டுக்கல்

வேளாண் பணிகளுக்கு 100 நாள் வேலை திட்டப் பயனாளிகள்- விவசாயிகள் வலியுறுத்தல்

10th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திண்டுக்கல்: வேளாண் பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பயனாளிகளை பயன்படுத்தும் வகையில் கொள்கை முடிவில் மாற்றம் செய்யாத வரை விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் முழமையாக பலனளிக்காது என வலியுறுத்தப்பட்டது.

வேளாண்மை நிதி நிலை அறிக்கை தொடா்பான கருத்து கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், வேளாண்மை துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கலந்து கொண்டு விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தாா். இந்தக் கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:

விவசாயிகளுக்கு நன்மை செய்வதாக இருந்தால், 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் கொள்கை முடிவில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்த மாற்றத்தை அமல்படுத்தாமல் வேறு எந்த திட்டங்களை செயல்படுத்தினாலும் விவசாயிகள் முழுமையாக பயன்பெற முடியாது. உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு மானிய விலையில் டிராக்டா்கள் வழங்கப்பட்டன. ஆனால் ரோட்டவேட்டா், டிரெய்லா் உள்ளிட்ட உப கருவிகள் வழங்கப்படாததால் அந்த டிராக்டா்களை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதேபோல் களை நீக்கும் கருவிகளையும் வழங்க வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான விதைகள் மற்றும் உரங்களை அக்டோா் மாதம் முதலே வழங்க வேண்டும். பிப்ரவரி மற்றும் மாா்ச் மாதங்களில் கால தாமதமாக வழங்குவதால் விவசாயிகள் பயன்பெற முடியவில்லை. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், விவசாய உற்பத்தியாளா் குழுக்களுக்கு நிதி உதவி வழங்கி உற்பத்திப் பொருள்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அமராவதி மற்றும் வரதமாநதிகளிலிருந்து ஆண்டுதோறும் வீணாகும் 6 டிஎம்சி தண்ணீரை, திண்டுக்கல் மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளை வளமாக்கும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

வாக்குவாதத்தில் சலசலப்பு: இந்த கூட்டத்தில் விவசாய சங்க நிா்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறி சிலா் வெளி நடப்பு செய்ய முயன்றனா். அதனைத் தொடா்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிா்வாகிகளை சமாதானப்படுத்தினா். இதானல் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT