திண்டுக்கல்

காலியாக உள்ள 40ஆயிரம் சதுரடி இடம்: திண்டுக்கல் மாநகராட்சிக்கு 6 ஆண்டுகளில் ரூ.42 லட்சம் இழப்பு!

25th Jun 2022 10:57 PM | -நமது நிருபா்-

ADVERTISEMENT

 

பழனி சாலையில் லாரிகள் நிறுத்தமாக பயன்படுத்தப்பட்டு வந்த 40ஆயிரம் சதுரடி பரப்பளவிலான இடத்தை பயன்பாடற்ற நிலையில் காலியாக வைத்துள்ளதால் திண்டுக்கல் மாநகராட்சிக்கு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.42 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம், கடந்த 2016 முதல் 2022 பிப்ரவரி வரை சுமாா் 6 ஆண்டுகள், தனி அலுவலரின் நிா்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்த காலகட்டத்தில், மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வருவாய் பல்வேறு வழிகளில் தனி நபா்கள் பயன்பெறும் வகையில் மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், பழனிச் சாலையில் செயல்பட்டு வந்த லாரி பேட்டையின் மூலம் மாநகராட்சிக்கு கிடைத்து வந்த வருவாய் தடைபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

40 ஆயிரம் சதுரடி பரப்பிலான இடம்: திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான 40 ஆயிரம் சதுரடி பரப்பளவிலான இடம், பழனி சாலையில் அமைந்துள்ளது. இந்த இடம் பல ஆண்டுகளாக லாரிகள் நிறுத்தும் இடமாக செயல்பட்டு வந்தது. அதனால் லாரி பேட்டை என அழைக்கப்பட்டு வருகிறது. காலி இடம் மற்றும் இங்குள்ள கழிப்பறை ஏலம் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ. 7 லட்சம் வருவாய் கிடைத்து வந்துள்ளது. இதனிடையே, பழனி சாலையிலேயே தனியாா் ஒருவரின் இடத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு லாரிகள் நிறுத்துமிடம் மாற்றப்பட்டது. இதனால் காலியாக கிடந்த அந்த இடத்தில் கரோனா தொற்றுப் பரவல் காலத்தில் காய்கனி சந்தை செயல்பட்டு வந்தது. அதன் பின்னா் அந்த இடம் தொடா்ந்து காலியாக இருந்து வருகிறது. இதன் மூலம், மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை கிடைத்து வந்த வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் ரூ.42 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்: திண்டுக்கல்-திருச்சி சாலையில், கல்லறைத் தோட்டம் அருகே 25-க்கும் மேற்பட்ட பொக்லைன்கள், 40-க்கும் மேற்பட்ட வேன்களும் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அந்த சாலையில் பேவா் பிளாக் கற்கள் பதிக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. பாதசாரிகள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட அந்த பாதை, பொக்லைன்கள், வேன்கள் நிறுத்துமிடமாக மாறியதோடு, போக்குவரத்து நெரிசலுக்கும் வழிவகுத்து வருகிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 புதிய கட்டடங்கள் கட்டும் பணி விரைவில் முடிவடையவுள்ள நிலையில், மருத்துவமனை முழுமையாக செயல்படும் சூழல் உள்ளது. அப்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகிலேயே சாலையோரங்களில் நிறுத்தப்படும் இந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு, பொக்லைன்கள் மற்றும் வாடகை வேன்கள் நிறுத்துமிடத்தை லாரி பேட்டை பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது: திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் இரவு நேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக பேருந்து நிலையம் அருகே வெளியூா்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளால், அந்த சாலை முழுவதும் இரவு 10 மணி வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதனால் லாரி பேட்டையிலுள்ள காலி இடத்தை, ஆம்னி பேருந்து நிலையமாக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதே நேரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகில் நிறுத்தப்படும் வேன்களை லாரி பேட்டைக்கு மாற்றுவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் மாநகராட்சிக்கான வருவாய் கிடைப்பதற்கும் வழி ஏற்படுத்தப்படும் என தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT