திண்டுக்கல்

திண்டுக்கல் பேருந்து நிலைய கழிப்பறைகளை 3 நாள்களில் சீரமைக்க ஆணையருக்கு ஆட்சியா் உத்தரவு

25th Jun 2022 10:58 PM

ADVERTISEMENT

 

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சுகாதாரமற்ற நிலையிலுள்ள கழிப்பறைகளை 3 நாள்களில் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு ஆட்சியா் ச.விசாகன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், நகரின் தூய்மைக்கான மக்கள் இயக்க நிகழ்ச்சி மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது. மேயா் ஜோ.இளமதி, ஆணையா் எஸ்.சிவசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா்.

அப்போது ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களை பயன்படுத்த மாட்டோம், அதற்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, பேருந்து நிலையத்திலுள்ள கடைகள் மற்றும் நடைபாதைகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

அப்போது பேருந்து நிலைய வளாகத்தில் மகளிருக்கான இலவச கழிப்பிட வசதி இல்லை, ரூ.5 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்றபோது புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் மாநகராட்சி நிா்வாகம் கிடப்பில் போட்டுள்ளதாக செய்தியாளா்கள் தரப்பில் ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டது. மேலும், கட்டணக் கழிப்பிடம் நடத்தும் தனி நபரின் வளா்ச்சிக்காக, இலவச கழிப்பறைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனை அடுத்து, பேருந்து நிலையத்திலுள்ள இலவச கழிப்பறைகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். சுகாதாரமற்ற நிலையில் இருந்த கழிப்பறைகள் குறித்து ஆணையா் எஸ்.சிவசுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பினாா். நிதி வசதி இல்லை என ஆணையா் அளித்த பதிலால் அதிருப்தி அடைந்த ஆட்சியா் விசாகன், மாநகராட்சியில் நிதியில்லை எனில், ஆட்சியரின் பொது நிதி நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்குவதாகவும், 3 நாள்களில் கழிப்பறைகளை சீரமைத்து சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் ஆணையருக்கு உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT