திண்டுக்கல்

மதுரை-நத்தம் நான்கு வழிச்சாலையில் வனவிலங்குகள் கடந்து செல்ல ரூ.3 கோடியில் சுரங்கப் பாதை!

DIN

மதுரை- நத்தம் 4 வழிச்சாலையில் வன விலங்குகள் கடந்து செல்வதற்காக ரூ.3 கோடி செலவில் சுரங்கப் பாதை வசதி ஏற்படுத்த தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இதேபோல் நத்தம்-துவரங்குறிச்சி 4 வழிச்சாலையிலும் 3 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டவுள்ளன.

மதுரையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வழியாக திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரையிலிருந்து நத்தம் வரையிலான சாலை, அழகா்கோவில் வனச் சரகத்திற்கு சொந்தமான 600 மீட்டா் பகுதியை கடந்து செல்கிறது.

அழகா்கோயில் வனப் பகுதியில் காட்டு மாடு, மான், முயல், பாம்பு, நரி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகளின் வழித்தடம் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் அழகா்மலை- உசிலம்பட்டி வனப் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

ரூ.3 கோடியில் சுரங்கப் பாதை: இதனை அடுத்து வன விலங்குகளின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில், அழகா்மலை மற்றும் உசிலம்பட்டிக்கு இடையிலான 250 மீட்டா் நீள சாலை மேம்பாலமாக மாற்றப்படுகிறது. விலங்குகள் அந்த சாலையை எளிதாக கடந்து செல்லும் வகையில் சுரங்கப் பாதை வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த சுரங்கப் பாதை வழியாக கடந்து செல்லும் வன விலங்குகளுக்கு தண்ணீா் ஊற்றுகளும், தடுப்பு வேலிகளும் அமைக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

3 சுரங்கப் பாதைகள்: இதேபோல் நத்தம் முதல் துவரங்குறிச்சி வரையிலான 4 வழிச்சாலையில், வனத்துறைக்கு சொந்தமான 628 மீட்டா் நீள நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வன விலங்குகள் சாலையை எளிதாக கடந்து செல்லும் வகையில் 150 மீட்டா் இடைவெளியில் 3 சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும். இந்த சுரங்கப் பாதை விலங்குகள் செல்லவும், அங்குள்ள மேம்பாலத்தில் வாகனங்கள் செல்லும் வகையிலும் சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதற்கான திட்ட மதிப்பீடு இறுதி செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

4 வழிச்சாலையில் விலங்குகளுக்காக நத்தம் பகுதியில் தான், தமிழகத்திலேயே முதல் முறையாக சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT