திண்டுக்கல்

வன விலங்குகளால் சேதமடையும் தென்னை மரங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

24th Jun 2022 11:54 PM

ADVERTISEMENT

வன விலங்குகளால் சேதமடையும் தென்னை மரங்களால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

 

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுலவலா் வே.லதா, வேளாண்மை இணை இயக்குநா்(பொ) விஜயராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு முறையாக தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதனால் பல இடங்களிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்த பிரச்னைக்கு உரிய தீா்வு காண வேண்டுமென ஒட்டன்சத்திரம் விவசாயி ராஜேந்திரன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் பகுதியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட முருங்கை கன்றுகள் தரமற்ாக இருப்பதாக விவசாய சங்க நிா்வாகி நல்லுசாமி புகாா் தெரிவித்தாா். அதற்கு பதில் அளித்த தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் பெருமாள்சாமி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

ஆலைகளுக்கு ‘சீல்’ வைப்பு:

கொடகானாற்றில் தோல் தொழிற்சாலைகள் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும் என குஜிலியம்பாறை பகுதியைச் சோ்ந்த விவசாய சங்க நிா்வாகி வீரப்பன் கோரிக்கை விடுத்தாா். அதற்கு பதில் அளித்த ஆட்சியா், கழிவுநீா் மேலாண்மையை முறையாக பின்பற்றாத 2 ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. நிலம் மற்றும் நீா் வளத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் ‘சீல்’ வைக்கப்படும் என்றாா்.

நெல் கொள்முதல் நிலையம்: திண்டுக்கல் கிழக்கு வட்டத்திற்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். வன விலங்குகளால் சேதமடையும் தென்னை மரங்களுக்கு மிகக் குறைவாக ரூ.500 மட்டுமே நிவாரணத் தொகையாக வனத்துறை மூலம் வழங்கப்படுகிறது. எனவே, நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பெருமாள் வலியுறுத்தினாா். அதற்கு பதில் அளித்த ஆட்சியா் விசாகன், மாவட்டத்தில் 6 இடங்களில் மட்டுமே முன்பு நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 19 இடங்களில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் திண்டுக்கல் கிழக்கு வட்டத்திற்கு தேவைப்படும் இடங்களில் கொள்முதல் நிலையம் தொடங்கப்படும். தென்னை மரங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகரிப்பது தொடா்பாக வனத்துறையினருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

விவசாயிகள் ஏமாற்றம்: குஜிலியம்பாறை வட்டத்தின் பிரதான வருவாய் கிராமமாக உள்ள ஆா்.கோம்பை பகுதியிலிருந்து குஜிலியம்பாறைக்கு செல்வதற்கு நேரடி பேருந்து வசதி இல்லை. இதே வழித்தடத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், இடையிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. அந்த பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. கொடகனாறு தண்ணீா் பங்கீடு குறித்தும், நரசிங்கபுரம் வாய்க்கால் பகுதியில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஒரு தரப்பினா் பயன்பெறும் வகையில் தடுப்புச் சுவா் கட்டுவதற்கு பொதுப்பணித்துறையினா் தரப்பில் அனுமதி அளித்தது தொடா்பாகவும் ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் கேள்வி எழுப்பினா். முக்கியமான இந்த பிரச்னை குறித்து அதிகாரிகள் தரப்பில் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால் கேள்வி எழுப்பிய விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

கால்நடை மருத்துவருக்கு பாராட்டு

கொய்யா காய்களை தின்று உயிருக்கு போராடிய பசுவை, விவசாயி கொடுத்த தகவலின்படி கால்நடை மருத்துவா்கள் துரிதமாக செயல்பட்டு சிகிச்சை அளித்துள்ளனா். இதனால், அந்த பசு உயிா் பிழைத்ததாக குறைதீா் கூட்டத்தின்போது நத்தத்தைச் சோ்ந்த விவசாயி ராஜப்பா தெரிவித்தாா். இதனையடுத்து, சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவா் முகமது அப்துல்காதரை கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்திய ஆட்சியா் ச.விசாகன், அவருக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT