திண்டுக்கல்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் பணியிடை நீக்கம்

24th Jun 2022 11:53 PM

ADVERTISEMENT

இம்மாத இறுதியில் ஓய்வுபெற இருந்த திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.கே.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையராக பணியாற்றி வந்த கே.கே.விஜயகுமாா், கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பரில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கான முதன்மையா்(டீன்) மற்றும் தனி அலுவலராக நியமிக்கப்பட்டாா். ரூ.328 கோடி மதிப்பீட்டிலான திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் இவரது தலைமையின் கீழ் நடைபெற்றன. திறப்பு விழாவுக்கு பின்னரும், விஜயகுமாரே மருத்துவக் கல்லூரி முதன்மையராக பணியாற்றி வந்தாா். ஜூன் 30ஆம் தேதி அவா் ஓய்வு பெற இருந்த நிலையில், முதன்மையா் விஜயகுமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றியபோது, அவா் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் மேற்கொண்ட விசாரணை நிலுவையில் இருப்பதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உணவகம் நடத்தியவரிடம் வாடகை வசூலிப்பது தொடா்பான புகாா் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினா் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. அந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜராகாததால், விசாரணை முடிவடையாமல் உள்ளது. இந்நிலையில், முதன்மையா் விஜயகுமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT