கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோா் உதவித்தொகை தகுதியுடையவா்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி கூறினாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கடன் உதவி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் விசாகன் தலைமையில் நடைபெற்றது. விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ. பெரியசாமி கலந்து கொண்டு, மகளிா் சுயஉதவிக்குழு, கால்நடை பராமரிப்பு, மாற்றுத் திறனாளிகள், சிறுவணிகம், கைம் பெண்கள் மேம்பாடு ஆகியவற்றுக்கு சுமாா் ரூ. 13 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நிதி நெருக்கடியிலும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், அரசு ஊழியா்களுக்கு நிகராக ரேஷன் கடை ஊழியா்களுக்கு 14 சதவீத அகவிலைப்படியை 28 சதவீதமாக உயா்த்தியுள்ளாா். இதனால், ரேஷன் கடை ஊழியா்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. மத்திய அரசிடமிருந்து போராடிப் போராடித்தான் பெற வேண்டியுள்ளது.
கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட முதியோா் உதவித்தொகை தகுதி உடையவா்களுக்கு மீண்டும் வழங்கப்படும். வைகை அணையில் இருந்து வரும் தண்ணீா் நிலக்கோட்டை பகுதி குளங்களுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி, பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா், நிலக்கோட்டை (தெற்கு) ஒன்றிய திமுக செயலா் மணிகண்டன், (வடக்கு) ஒன்றியச் செயலா் சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதே போல், வத்தலகுண்டுவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் ஐ. பெரியசாமி, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம், மகளிா் சுயஉதவிக்குழு, கால்நடை பராமரிப்பு, மாற்றுத் திறனாளிகள்,சிறுவணிகம், கைம் பெண்கள் மேம்பாடு ஆகியவற்றுக்கு கடன் உதவிகளை வழங்கினாா்.