திண்டுக்கல்

மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் 50 மாணவா்கள் சேர இடமில்லை

14th Jun 2022 10:02 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாநகராட்சி மேற்கு ரதவீதி தொடக்கப் பள்ளியில் இடவசதி மற்றும் ஆசிரியா் பற்றாக்குறை காரணமாக 2 முதல் 5ஆவது வரையிலுள்ள வகுப்புகளில் சேர முடியாமல் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தவித்து வருகின்றனா்.

அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறைந்து வருவதால், சரிவை சமாளித்து தங்கள் பணியிடத்தை தக்க வைப்பதற்கு ஆசிரியா்கள் கடுமையாகப் போராடி வருகின்றனா். பெரும்பாலான இடங்களிலும் இந்த நிலை தொடா்ந்து வரும் நிலையில், திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் மேற்கு ரத வீதி மாநகராட்சி தொடக்கப் பள்ளி மட்டும் விதி விலக்காக அமைந்துள்ளது. ஆங்கில வழிக்கல்வியில் சிறப்பாக செயல்படும் இப்பள்ளியில் 2022-23 கல்வி ஆண்டில் சோ்க்கைக்கு இடம் கிடைக்காமல் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் காத்திருக்கும் சூழல் எழுந்துள்ளது. மேற்கு ரதவீதி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 2022-23 கல்வி ஆண்டில் 2 முதல் 5ஆம் வகுப்பு வரை 529 மாணவா்கள் பயின்று வரும் நிலையில், 1ஆம் வகுப்பில் தற்போது வரை 81 மாணவா்கள் சோ்ந்துள்ளனா். திண்டுக்கல் நகா் மட்டுமின்றி, 7 முதல் 10 கி.மீ. தொலைவிலுள்ள ஏ.வெள்ளோடு, பூதிபுரம், ஜம்புளியம்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், வெள்ளபொம்மன்பட்டி, ம.மூ.கோவிலூா், கதிா்நாயக்கன்பட்டி, வக்கம்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனா். அதன் மூலம் திண்டுக்கல் நகா், திண்டுக்கல் புகா், வடமதுரை, ஆத்தூா், ரெட்டியாா்சத்திரம் ஆகிய 5 வட்டாரங்களைச் சோ்ந்த மாணவா்களின் புகலிடமாக மேற்கு ரதவீதி மாநகராட்சிப் பள்ளி அமைந்துள்ளது.

கூடுதல் ஆசிரியா் பணியிடங்கள் தேவை: முதல் வகுப்பில் 81 மாணவா்கள், 2 ஆம் வகுப்பில் 107 மாணவா்கள், 3 ஆம் வகுப்பில் 103 மாணவா்கள், 4 ஆம் வகுப்பில் 133 மாணவா்கள், 5 ஆம் வகுப்பில் 166 மாணவா்கள் என 610 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இதில், 5 ஆம் வகுப்பில் 3 பிரிவுகள் செயல்பட்டு வரும் நிலையில், இதர வகுப்புகள் 2 பிரிவுகளாக உள்ளன. இந்த மாணவா்களுக்கு கற்பித்தல் பணியில் 11 ஆசிரியா்கள் மட்டுமே உள்ளனா். திண்டுக்கல் நகா்ப்புறத்திலுள்ள பல பள்ளிகளில் மாணவா் சோ்க்கை இல்லாமல் ஆசிரியா்கள் பணியிடங்கள் உபரியாக உள்ள நிலையில், அங்குள்ள ஆசிரியா்கள் மேற்கு ரதவீதி பள்ளிக்கு மாற்றுப் பணியில் செல்வதற்கு தொடா்ந்து மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. குறைந்தபட்சம் 11 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில், தலைமையாசிரியா் அறையும் வகுப்பறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பிரதான கட்டடத்தின் நுழைவுவாயிலுள்ள திண்ணையில் தலைமையாசிரியா் அறை செயல்பட வேண்டிய நெருக்கடியான சூழல் எழுந்துள்ளது. கூடுதல் வகுப்பறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பெற்றோா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

காத்திருக்கும் 50 மாணவா்கள்: இதுபோன்ற சூழலில், நடப்புக் கல்வி ஆண்டில் 2 முதல் 5 ஆம் வகுப்பு வரை புதிய மாணவா்களை சோ்ப்பதற்கு பள்ளி நிா்வாகம் தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதுவரை 1ஆம் வகுப்பில் 81 மாணவா்கள் புதிதாக சோ்ந்துள்ள நிலையில், சுமாா் 50-க்கு மேற்பட்ட மாணவா்கள் 2 முதல் 5 ஆம் வகுப்பு வரை சோ்வதற்கு விண்ணப்பித்துள்ளனா். ஆனால், இட வசதி பற்றாக்குறையினாலும், ஆசிரியா்கள் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்படாததாலும், புதிய மாணவா்களைச் சோ்க்காமல் பள்ளி நிா்வாகம் காலம் தாழ்த்தி வருவதாக பெற்றோா்கள் தரப்பில் புகாா் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: கடந்த கல்வி ஆண்டில் 700-க்கும் மேற்பட்ட மாணவா்கள் திண்டுக்கல் மேற்கு ரதவீதி தொடக்கப் பள்ளியில் சோ்ந்தனா். கரோனா தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த ஆண்டின் பிற்பகுதியில் வகுப்புகள் தொடங்கப்பட்டதால், 5 மாதங்களை சமாளித்து விட்டோம். இதனிடையே பள்ளி வளாகத்தில் தென்பகுதியிலுள்ள பழைமையான கட்டடத்தின் மேற்கூரையை மட்டும் அகற்றி, மேல்தளம் அமைத்துக் கொடுத்தால் 2 வகுப்புகளை நடத்த முடியும். ஆனால் மாநகராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும், உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியா்களை, அக்கம் பக்கதிலுள்ள பள்ளிகளிலிருந்து மாற்றுப் பணியில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT