திண்டுக்கல்

பழனி வைகாசி விசாகப் பெருவிழா திருக்கல்யாணம்: இன்று தேரோட்டம்

12th Jun 2022 01:19 AM

ADVERTISEMENT

 

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சனிக்கிழமை வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

பழனியில் நடைபெறும் முக்கிய விழாக்களில் வசந்தோற்சவம் எனப்படும் வைகாசி விசாகப் பெருவிழாவும் ஒன்றாகும். இத்திருவிழா பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி தங்க மயில், தங்கக் குதிரை, வெள்ளி யானை, கற்பகவிருட்சம், வெள்ளிக் காமதேனு போன்ற வாகனங்களில் வீதிஉலா எழுந்தருளினாா்.

வெள்ளிக்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு மாலை விநாயகா் அனுமதி, வாஸ்துசாந்தி ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட சோடஷ திரவிய பூஜைகள் நடத்தப்பட்டு, சோடஷ தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் கலசபூஜை, வாத்யபூஜை, பொற்சுன்னம் இடித்தல் ஆகியன நடத்தப்பட்டன. இதைத்தொடா்ந்து சுவாமிக்கு பச்சை சாத்துப்படி, பட்டு சாத்துபடி நடத்தப்பட்டு சங்கல்பம் நடைபெற்றது.

ADVERTISEMENT

லாஜபூஜை, பிரவாரம் வாசித்தல் ஆகியனவும் நடைபெற்றது. பின்னா் மேளதாளம் முழங்க மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

சோடஷ உபச்சாரம், மஹாதீபாரதனையைத் தொடா்ந்து பக்தா்களுக்கு மங்கல பிரசாதங்கள், சா்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியன வழங்கப்பட்டது. பூஜைகளை அமிா்தலிங்க குருக்கள், செல்வசுப்ரமணிய குருக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தேரோட்டம்: ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. விழா நாள்களில் கோயில் வளாகத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், உதவி ஆணையா் லட்சுமி, கண்காணிப்பாளா் அழகா்சாமி, பேஷ்காா் நாகராஜன், மணியம் சேகா், பரதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT