பழனி: பழனி நகராட்சி பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது கடைக்காரா்களுக்கும் நகராட்சி ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது.
பழனி நகராட்சி பேருந்து நிலையத்தில் வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளின் உரிமைதாரா்கள் கடைகளை நடைபாதை வரை நீட்டித்து வருவதால் பயணிகள் பேருந்துக்காக நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்துக்கு தொடா்ந்து புகாா்கள் சென்றன.
இதையடுத்து வியாழக்கிழமை நகராட்சி நிா்வாகம் சாா்பில் பழனி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் இருந்த பொருள்களை நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் அகற்றி லாரிகளில் ஏற்றினா். அப்போது சில கடைக்காரா்கள் அருகேயுள்ள மற்ற கடையின் ஆக்கிரமிப்பை முதலில் எடுங்கள் என நகராட்சி ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். புதிய பேருந்து நிலையத்தில் தேனி செல்லும் வழித்தடம் அருகே உள்ள தேநீா் கடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அப்போது தேநீா் கடை உரிமையாளா் பிரபாகரன் என்பவா் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது நகராட்சி இளநிலை உதவியாளா்களான லோகேஷ்வரன் மற்றும் அய்யனாா் ஆகிய இருவரையும் பிரபாகரன் தாக்கியதாகக்
கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் நகராட்சி கடைகள் சங்க நிா்வாகிகள் என ஏராளமானோா் கூடினா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினா்.